2017-01-18 13:46:00

சாம்பலில் பூத்த சரித்திரம் – திருத்தூதர்கள் பேதுரு, யோவான்


சன.18,2017. பெரும் சாதனை செய்வதற்கு, ஏளனம், எதிர்ப்பு, அங்கீகாரம் ஆகிய மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும் என்று சொன்னார் சுவாமி விவேகானந்தர். திருஅவையின் வரலாற்றில் தடம்பதித்து, அதை வீரத்துடன் முன்னோக்கி நடத்திச் சென்றவர்களும், இந்த மூன்று நிலைகளைக் கடந்து வந்தவர்கள் என்றே, வரலாற்றுப் பதிவுகள் வழியாக அறிகிறோம். திருஅவையின் வரலாறு, இயேசு மற்றும் திருத்தூதர்கள் காலத்திலிருந்து, அதாவது, கி.பி.30ம் ஆண்டிலிருந்து தொடங்குகின்றது. இயேசு கிறிஸ்துவின் மரணம், மற்றும் உயிர்ப்புக்குப் பின், கிறிஸ்தவ விசுவாசம் பிறந்தது. இயேசுவைப் பற்றிய அருளின் நற்செய்தி போதிக்கப்பட்டது. அன்று எருசலேமில், பெந்தக்கோஸ்து விழா நாளில், திருத்தூதர்கள் தூய ஆவியாரைப் பெற்ற பின், பல மொழிகளில் பேசி இறைவனின் மாண்பைப் போற்றினார்கள். திருத்தூதர்கள் அன்று பேசியதை, எருசலேமில் விழாவுக்காகக் கூடியிருந்த கூட்டத்தினர் தத்தம் மொழிகளில் புரிந்து கொண்டனர். புதுமையான இந்நிகழ்வு, திருஅவை, எல்லா மக்களையும் இணைக்க வேண்டும் என்பதன் அடையாளமாக இருக்கிறது. அன்றைய மக்கள் கூட்டம், அகில உலகமும் கூடியிருந்ததற்குச் சமம், உலக நாடுகள் அனைத்திற்கும் பிரதிநிதிகள் இவர்கள் என்று, விவிலிய அறிஞர்கள் சொல்கிறார்கள். எனவே, பெந்தக்கோஸ்து நாளில், அகில உலகத் திருஅவை உருவானது.

பெந்தக்கோஸ்து நாளில் நடந்த அற்புதம், தொடர்ந்தது. திருத்தூதர்கள் வழியாகப் பல அருஞ்செயல்களும் அடையாளங்களும் நிகழ்ந்தன. கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்ட மக்கள் அனைவரும், தங்களின் நிலபுலன்கள் மற்றும் பிற உடைமைகளை விற்று, அவரவர் தேவைகளுக்கேற்ப பகிர்ந்தளித்தனர். பேறுவகையோடும் எளிய உள்ளத்தோடும், உணவைப் பகிர்ந்து உண்டு, கடவுளைப் போற்றி வந்தார்கள். ஒருநாள் இறைவேண்டல் செய்யும் நேரமாகிய பிற்பகல் மூன்று மணிக்குப் பேதுருவும் யோவானும் கோவிலுக்குச் சென்றனர். அப்பொழுது பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவரைச் சிலர் சுமந்து கொண்டு வந்தனர். கோவிலுக்குள் செல்பவரிடம் பிச்சைக் கேட்பதற்காக அவரை நாள்தோறும் கோவிலின் அழகுவாயில் என்னுமிடத்தில் வைப்பர். அவர் கோவிலுக்குள் சென்றுகொண்டிருந்த பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சைக் கேட்டார். பேதுருவும் யோவானும் அவரை உற்றுப்பார்த்து, எங்களைப் பார் என்று கூறினர். அவர், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் அவர்களை ஆவலுடன் நோக்கினார். பேதுரு அவரிடம், வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை. என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும் என்று கூறி, அவரது வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூக்கிவிட்டார். உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன. அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங்கினார். அவர் நடப்பதையும் கடவுளைப் போற்றுவதையும் மக்களனைவரும் கண்டனர். நடந்ததைப் பார்த்துத் திகைப்பு மிகுந்தவராய் மெய்மறந்து நின்றனர்.

திருத்தூதர்களின் போதனைகளையும், அற்புதங்களையும் கேட்ட மக்கள், திருஅவையில் சேரத் தொடங்கினர். பேதுருவும் யோவானும், மக்களோடு பேசிக்கொண்டிருந்ததைக் கண்ட யூதக் குருக்களும், கோவில் காவல் தலைவரும் எரிச்சலடைந்தனர். இவ்வாறு அவர்கள், முதல் மறைக் கலகத்திற்கு வித்திட்டனர். இவர்களைக் கைது செய்து, மறுநாள்வரை காவலில் வைத்தார்கள். எருசலேமில், மேலும் பல யூதத் தலைவர்கள் ஒன்றுகூடி, பேதுருவையும் யோவானையும் அழைத்து, இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டு எச்சரித்து அனுப்பினர். அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது என்றனர். அவர்களைத் தண்டிப்பதற்கு வேறு வழி கண்டுபிடிக்க முடியாததாலும், மக்களுக்கு அஞ்சியதாலும் தலைமைச் சங்கத்தார் அவர்களை மீண்டும் அச்சுறுத்தி விடுதலை செய்தனர். பேதுருவும் யோவானும், கல்வியறிவற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப்படைந்தனர். 

திருத்தூதர்கள் பேதுருவும், யோவானும், துணிவுடன் நற்செய்தியைப் போதிப்பதற்கு, தூய ஆவியிடம் எல்லாரும் சேர்ந்து மன்றாடினர். எனினும், யூதத் தலைவர்கள், அவர்கள் இருவரையும் பொறாமையால், மீண்டும், கைது செய்து, பொதுச் சிறையில் காவலில் வைத்தனர். ஆயினும், ஆண்டவரின் தூதர், அவர்களை, இரவில் சிறைச்சாலையிலிருந்து வெளியே அழைத்துச் சென்றார். திருத்தூதர்கள் தொடர்ந்து எதற்கும் அஞ்சாது நற்செய்தியை அறிவித்து வந்தனர். அச்சம் இருந்தால், எதையுமே சாதிக்க முடியாது என்பதற்கு, பேதுருவும், யோவானும் நமக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். அச்சம், என்பது அடிமையின் குணங்கள். இது, அறிவினை மறைத்திடும் மன இருள், துணிவை அழித்திடும் பகைவன், கோழையாய் மாற்றிடும் நண்பன், அமைதியின் தொடர் எதிரி, உரிமையை பறித்திடும் திருடன். அச்சம் இருந்தால், நம்மிடமுள்ள அன்பானவர்களை வெறுக்க வைக்கும். அரிஸ்டாட்டில் சொன்னார்-அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதரிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது என்று.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.