2017-01-18 15:45:00

கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்திற்கு திருத்தந்தையின் டுவிட்டர்


சன.18,2017. "இயேசு கிறிஸ்துவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையினால் உருவாகும் நெருக்கம், அவரில் நாம் அனைவரும் ஒன்றித்திருப்பதன் அவசியத்தை வெளிக் கொணர்கிறது" என்ற சொற்களை, சனவரி 18, இப்புதனன்று, தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 18, இப்புதன் முதல், 25, வருகிற புதன் முடிய கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கு செபிக்கும் வாரம் கத்தோலிக்கத் திருஅவையில் கடைபிடிக்கப்படுவதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளார்.

"கிறிஸ்துவின் அன்பு ஒப்புரவை நோக்கி நம்மை உந்தித் தள்ளுகிறது" (காண்க. 2 கொரி. 5:14-20) என்பதை மையப் பொருளாக கொண்டுள்ள இந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்தில், லூத்தரன் சீர்திருத்த இயக்கத்தின் 500ம் ஆண்டு நிறைவு, சிறப்பாக நினைவுகூரப்படுகிறது.

கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்பட்டு வரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம், சனவரி 25ம் தேதி, திருத்தூதர் பவுல் மனமாற்ற திருநாளன்று நிறைவு பெறுகிறது.

சனவரி 25, வருகிற புதனன்று மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதர் புனித பவுல் பசிலிக்காவில் மாலை வழிபாட்டை தலைமையேற்று நடத்தி, இந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை நிறைவுக்குக் கொணர்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.