2017-01-17 15:03:00

பாசமுள்ள பார்வையில்... மேதையைச் செதுக்கிய மாமேதை


ஒருவர் சிந்தனையில் புதியதோர் எண்ணம் உதித்தது என்பதைச் சொல்வதற்கு, ஒரு மின்விளக்கு 'பளிச்'சென்று  எரிவதுபோன்ற அடையாளத்தைப் பயன்படுத்துவோம். அந்த மின்விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் எடிசனின் குழந்தைப் பருவத்தில், அதிகம் ஒளி வீசவில்லை என்பதை அறிவோம்.

சிறுவன் தாமஸ் ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பியதும், தன் தாயிடம் சென்று, "அம்மா, இந்தக் கடிதத்தை என் வகுப்பு ஆசிரியர் உங்களிடம் கொடுக்கச் சொன்னார்" என்று சொல்லி, ஒரு தாளை அவரிடம் கொடுத்தார். அந்த மடலைப் பிரித்துப் பார்த்த அன்னை நான்சி அவர்கள், மிகவும் மலர்ந்த ஒரு முகத்துடன், தன் மகனிடம் அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததை சப்தமாக வாசித்தார்: "உங்கள் மகன் ஒரு தலை சிறந்த அறிவாளி. அவனுக்குச் சொல்லித்தரும் அளவு தகுதியான ஓர் ஆசிரியர் எங்கள் பள்ளியில் இல்லை. எனவே, உங்கள் மகனுக்கு இனி நீங்களே பாடம் சொல்லித்தாருங்கள்" என்று, அந்த அன்னை, மடலை வாசித்துவிட்டு, மகனை ஆரத்தழுவிக்கொண்டார். சிறுவன் தாமஸுக்கு அன்று முதல் அவரது அன்னையே ஆசிரியரானார்.

அறிவியல் உலகில் புதிய கண்டுபிடிப்புக்களுக்கு உரிமையாளரான தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள், தன் தாயின் மறைவுக்குப் பின் ஒரு நாள், அவரது உடைமைகள் அடங்கிய ஒரு பெட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அப்பெட்டியின் ஓரத்தில் மடித்து வைக்கப்பட்ட ஒரு மடலைக் கண்டார். அது, அவரது வகுப்பு ஆசிரியர் எழுதியிருந்த மடல். அம்மடலைப் பிரித்துப் படித்தார், தாமஸ். அம்மடலில், "உங்கள் மகன் அறிவுத்திறனற்றவன். அவனுக்கு இனி எங்கள் பள்ளியில் இடமில்லை" என்று எழுதியிருந்தது.

அம்மடலை வாசித்த தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள், பல நிமிடங்கள் கண்ணீர்விட்டு அழுதார். பின்னர், தன் நாள் குறிப்பேட்டில் அவர் பின்வருமாறு எழுதினார்: "அறிவுத்திறனற்ற தாமஸ் எடிசனை ஒரு மேதையாக மாற்றிய பெருமை, மாமேதையான அவனது தாயைச் சாரும்."

தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களது பெயரில், 1,093 கண்டுபிடிப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மிகவும் புகழ்பெற்றது, மின்விளக்கு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.