2017-01-17 15:21:00

இரக்கப் பணிகளைப் புதிய வழிகளில் ஆற்ற திருத்தந்தை அழைப்பு


சன.17,2017. இறை இரக்கத்தின் செய்தியைத் தாங்கிச் செல்லவும், அச்செய்தியைப் பரப்புவதற்குப் புதிய வழிகளைத் தேடவும், கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிலிப்பீன்சின் மனிலாவில், நடைபெற்றுவரும், இரக்கம் பற்றிய நான்காவது உலக திருத்தூது மாநாட்டில் (WACOM  IV) கலந்துகொள்ளும், ஆயிரக்கணக்கான மக்களுக்கு, இச்செவ்வாயன்று திருப்பலி நிறைவேற்றி, மறையுரையாற்றிய, கர்தினால் Philippe Barbarin, அவர்கள், இம்மாநாடு பற்றிய திருத்தந்தையின் எண்ணங்களையும் மறையுரையில் பகிர்ந்துகொண்டார்.

திருத்தந்தையின் சிறப்புப் பிரதிநிதியாக, இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரெஞ்சு கர்தினால் Barbarin அவர்கள்,  இரக்கப் பணிகளைப் புதிய வழிகளில் ஆற்ற திருத்தந்தை அழைப்பு விடுப்பதைச் சுட்டிக்காட்டினார்.

இந்த மாநாடு குறித்து திருத்தந்தை மகிழ்வதாகவும், இக்காலத்தின் சமூகப் பிரச்சனைகளுக்கு, சரியான தீர்வுகளைக் காணுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளதாகவும், கூறினார் கர்தினால் Barbarin.

இம்மாநாட்டுக்கென, கர்தினால் Barbarin அவர்கள் வழியாக, திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தி, இம்மாநாட்டின் நிறைவு நாளான வருகிற வெள்ளியன்று, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இந்நிறைவு நிகழ்வு, Bataan மாநிலத்திலுள்ள Balangaல் நடைபெறும்.

இன்னும், சனவரி 16, இத்திங்கள் முதல், சனவரி 20, வருகிற வெள்ளி வரை நடைபெறும், இரக்கம் பற்றிய நான்காவது உலக திருத்தூது மாநாட்டில், நாற்பது நாடுகளிலிருந்து ஏறக்குறைய ஐந்தாயிரம் பேர் கலந்துகொள்கின்றனர்.

ஆதாரம் : CBCP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.