2017-01-17 15:29:00

இரக்கத்தின் திருத்தூதர்களாகச் செயல்படுவோம்,கர்தினால் தாக்லே


சன.17,2017. இரக்கம் பற்றிய நான்காவது உலக திருத்தூது மாநாட்டை, மனிலாவில், இத்திங்களன்று, திருப்பலி நிறைவேற்றி ஆரம்பித்து வைத்த, மனிலா கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், இயேசுவின் இரக்கத்தை வெளிப்படுத்தும் திருத்தூதர்களாக, நாம் எல்லாரும் செயல்படுவோம் என்று கேட்டுக்கொண்டார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிலிப்பீன்ஸ் நாட்டிற்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டதன் இரண்டாம் ஆண்டு நிறைவு நாளன்று, இந்த மாநாடு ஆரம்பிக்கின்றது என்று, மறையுரையில் குறிப்பிட்ட, கர்தினால் தாக்லே அவர்கள், இரக்கத்தை, தாழ்மையோடு வாழ்ந்து காட்டுவோம் என்று கூறினார்.

இன்னும், பிலிப்பீன்சில், சட்டத்துக்குப் புறம்பே இடம்பெறும் கொலைகள் குறித்து, நம்மில் பலர், பொதுப்படையாகக் கண்டனக் குரல் எழுப்பத் தவறுவது, நம் வாழ்வும், விசுவாசமும் தனித்தனியாகப் பிரிந்து நிற்பதன் அடையாளமாக உள்ளது என்று, பிலிப்பீன்ஸ் கர்தினால் Orlando Quevedo அவர்கள், கவலை தெரிவித்தார்.

பிலிப்பீன்சில் நடைபெற்றுவரும் இரக்கம் பற்றிய நான்காவது உலக திருத்தூது மாநாடு பற்றி செய்தியாளர் கூட்டத்தில் பேசிய, Cotabato கர்தினால் Quevedo அவர்கள், பிலிப்பீன்சில், விசுவாச வாழ்வு, செயல்படுத்தப்படாததால், ஊழலும், கொலைகளும் இடம்பெறுகின்றன என்று கூறினார்.

நம் விசுவாசம் ஒரு தளத்திலும், வாழ்வு மற்றொரு தளத்திலும் இருக்கும் நிலையைச் சுட்டிக்காட்டிப் பேசிய கர்தினால் Quevedo அவர்கள், நாட்டில் குற்றங்களை ஒழிப்பதற்கு, அரசுத்தலைவர் Rodrigo Duterte அவர்கள், உறுதியுடன் செயல்படுவதைப் பாராட்டியுள்ள அதேவேளை, போதைப்பொருள் வர்த்தகத்தோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், சரியான சட்ட நடைமுறைகளின்றி கொல்லப்படுவது தவறு என்றும், குறை கூறினார்.  

ஆதாரம் : CBCP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.