2017-01-17 15:46:00

இந்திய கத்தோலிக்க இளையோரின் தேசிய மாநாடு மங்களூரில்


சன.17,2017. இந்திய கத்தோலிக்க இளையோரின் தேசிய அளவிலான மாநாடு, இப்புதன் முதல் ஞாயிறு வரை, கர்நாடகாவின் மங்களூரில் இடம்பெற உள்ளது.

மூவாயிரத்திற்கும் மேறபட்ட இந்திய கத்தோலிக்க இளையோர் தலைவர்களின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டின் இறுதி நிகழ்வாக நடக்கும் அமைதிக்கான ஊர்வலத்தில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளையோர் கலந்துகொள்வார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.

'இயேசுவால் தொடப்பட்டு, அவர் பாதையில் வழிநடத்தல்' என்ற தலைப்பில் இடம்பெறும் இக்கூட்டத்தின் துவக்க விழாவில், இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ், எர்ணாகுளம் பேராயரும் சீரோ மலங்கரா வழிபாட்டுமுறையின் தலைவருமான கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி, மும்பை கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். குழந்தைகளின் முன்னேற்றம், சமூக, பொருளாதார சூழல்களில் தலைமைத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாடு போன்றவைகள் குறித்து, இந்த இளைஞர்கள் மாநாட்டில் விவாதிக்கப்படும் என்றார் மங்களூர் ஆயர் அலாய்சியஸ் பால் டிசூசா.

மூன்றாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் இந்த இந்திய கத்தோலிக்க இளையோர் மாநாட்டில் 171 மறைமாவட்டங்களிலிருந்து, இளையோர் தலைவர்கள், கலந்து கொள்கின்றனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.