2017-01-16 15:43:00

வாரம் ஓர் அலசல் – தனது திறமையை உணர்ந்து செயல்பட்டால்..


சன.16,2017. அன்புத் தமிழ் நண்பர்களே, தமிழரின் பண்பாட்டு விழாவாம், இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டு, நான்கு நாள் விழாக்களை நிறைவுசெய்து, சாதாரண வாழ்வுக்குத் திரும்பியுள்ளோம். உரோமையில் வாழும் தமிழர்களும், இஞ்ஞாயிறன்று ஒன்றாகச் சேர்ந்து, பொங்கல் விழாவைச் சிறப்பித்து மகிழ்ந்தோம். இவ்விழாவில் உரையாற்றிய அருள்பணியாளர்கள், கல் தோன்றி, மண் தோன்றா காலத்திற்கு, முன்தோன்றிய மூத்த தமிழ்க் குடியின் வரலாற்றுச் சிறப்புக்களை, அழகாக எடுத்துச் சொன்னார்கள்.

மெக்சிகோவின் கிழக்குப் பகுதியிலுள்ள மழைக்காடுகளுக்குள் வாழ்ந்து வந்த மாயா இன மக்கள், பண்பாட்டிலும், நாகரீகத்திலும் சிறந்து விளங்கியவர்கள். இதற்கு, அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள, பிரமிக்க வைக்கும், பாழடைந்த கட்டங்கள், பிரமிடுகள், வழிபாட்டுத் தலங்கள், விளையாட்டு மைதானங்கள், உயரமான செதுக்கப்பட்ட கற்தூண்கள் போன்றவையே சான்று. இவ்வளவு பெரிய கற்களை, அடர்ந்த காட்டிற்குள் கொண்டுவந்து, அவற்றைச் சரிவர அடுக்கி, கட்டடங்களையும், பிரமிடுகளையும் அம்மக்கள் அமைத்துள்ளது ஆய்வாளர்களை வியப்படைய வைத்துள்ளது. இம்மக்களின் நாகரீகம், கி.மு. இரண்டாயிரமாம் ஆண்டு முதல், 250வரை, வளர்ச்சிக் காலமாகவும், 250 தொடங்கி, 900 வரை, பொற்காலமாகவும் கருதப்படுகிறது. கி.மு. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகள், மாயாக்களின் உச்சகட்ட பொற்காலம் எனவும் கூறப்படுகின்றது. வானியல் அறிவில், வல்லமை பெற்றிருந்த மாயாக்கள், சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் போன்றவற்றின் சுழற்சி முறைகளை, மிக நுணுக்கமாக கணித்து ஆவணப்படுத்தியிருந்தனர். மதச் சடங்குகளில் தீவீர நம்பிக்கை கொண்டிருந்த மாயா இன மக்கள், வானியல் நிகழ்ச்சிகளையொட்டியே சடங்குகளை நடத்தினர். இந்திய நாகரிகத்தை அடுத்து, மாயாக்களும்,  பூஜ்ஜியத்தை கணக்கு வழக்குகளில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இவர்கள், பூஜ்ஜியம் முதல் இருபது வரையிலான எண் வகைகளை, அமல்படுத்தியிருக்கிறார்கள். கல்வெட்டுகளில் இவர்கள் இலட்சம் வரையில் கணக்கு வழக்குகளை எழுதிப் பார்த்திருக்கிறார்கள். அவை பெரும்பாலும் வானியல் ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்வளவு வளமையாக வளர்ந்த நாகரீகம் படிப்படியாக அழிந்து போனதற்கான காரணத்தை, அறிஞர்கள் இன்னும் உறுதிப்படக் கூறவில்லை. எனினும், மாயா இன மக்கள், மாயமாகிப் போனதற்கும், அதேநேரம், வரலாற்றில், மூத்த தமிழ்க் குடி தொடர்ந்து வாழ்வதற்கும், Rudolf Otto என்ற எழுத்தாளர், தனது The Awe Experience என்ற நூலில், இவ்வாறு சொல்லியிருக்கிறார்..

மாயா இன மக்கள் இயற்கைக்குப் பயந்து வாழ்ந்தனர். அதனால் இயற்கைக்குத் தங்களைப் பலி கொடுத்து, கொடுத்து அழிந்தே போயினர். ஆனால், தமிழ் மக்கள், இயற்கை மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தனர். இயற்கையைக் கடவுளாகப் பார்த்து வணங்கினர். இயற்கைக்காக ஒரு விழாவையும் கொண்டாடினர்

தமிழர்கள், இயற்கைக்கு நன்றி கூறும் பொங்கல் விழாவை, பழங்காலத்திலிருந்தே கொண்டாடி வந்திருக்கிறார்கள். இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே, தமிழர்கள் உழவுத்தொழில் செய்துள்ளார்கள். கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே, கடல் கடந்த வர்த்தகத்தைச் செய்துள்ளனர். இன்று உலகில் பேசப்படும் மொழிகளில், எழுத்து வடிவில் வந்த முதல் மொழி, தமிழ். கி.மு.3ம் மற்றும் 4ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், தமிழர்கள், தங்களுக்கென ஓர் இலக்கியத்தை அமைத்தனர். அதுதான், சங்க இலக்கியம். 12,000 ஆண்டுகளுக்குமுன் முதல் சங்கம் ஆரம்பித்திருக்கிறது. நேபாளத்துக்கும் திபெத்துக்குமிடையே சோழர் கணவாய் இருந்துள்ளது (Readers Digest 1971-Atlas). இப்படி, எல்லாத் துறைகளிலும், எல்லா நற்பண்புகளிலும், புகழ்பெற்ற தமிழினம் இன்று, பதவிக்காக, ஆதாயத்துக்காக, காலில் விழுந்து வணங்கும் ஓர் இழிநிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றது. தென்டனிட்டு வணங்கும் கலாச்சாரம், மானமுள்ள தமிழருக்குத் தலைக்குனிவை ஏற்படுத்துகின்றது. ஒருவர் குமுறுகிறார் - இன்று,  தாழ்வாரம் வீடாகிவிட்டது. தவிடு நெல்லாகிவிட்டது. தோகை, ஒரே நாளில் மயிலாகிவிட்டது என்று.

தலைநிமிர்ந்து நிற்கவேண்டிய தமிழினம் மட்டுமல்ல, இன்றைய மனிதர்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கும் ஒரு காரணம், நீயா, நானா, நீ பெரியவனா நான் பெரியவனா? என்பதே. சுவாமி விவேகானந்தர் அவர்கள், இதை ஒரு கதை மூலம் விளக்கியதை, விகடன் இதழில் வாசித்தோம். 

தனது நாட்டுக்கு வரும் துறவிகளைப் பார்த்து,  உயர்ந்தவன் யார் என்று கேட்கும் பழக்கமுடைய அரசர் ஒருவரை, ஒருநாள், துறவி ஒருவர் சந்திக்கச் சென்றார். அவரிடமும் அரசர் வழக்கம்போல் தனது கேள்வியைக் கேட்டார். அதற்கு அந்தத் துறவி மற்றவர்களைப் போல் பதில் சொல்லாமல், அவரவர் நிலையில் இருந்து தவறாமல் இருக்கும்போது, இருவரும் சமமானவர்களே என்று பதில் சொன்னார். அரசரும், வழக்கம்போல், துறவி சொன்னதை நிரூபிக்கச் சொன்னார். துறவியும், ‘‘நான் அதை நிரூபிக்கிறேன். ஆனால், நீங்கள் என்னுடன் வந்து, நான் வாழ்வதுபோல் சிலநாள் வாழவேண்டும்’என்றார். அரசரும் ஒப்புக்கொள்ளவே, இருவரும் பயணத்தைத் தொடங்கினர். பல நாடுகளின் வழியாக பயணம் செய்தவர்கள், கடைசியாக ஒரு நாட்டின் தலைநகருக்கு வந்தனர். அன்றைக்கு, அந்தத் தலைநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. காரணம், அந்த நாட்டின் இளவரசிக்கு அன்றைக்கு சுயம்வரம் நடைபெற இருந்ததுதான். சுயம்வரம் நடைபெற்ற மண்டபத்துக்கு இந்தத் துறவியும், அரசரும் வந்து சேர்ந்தனர். சுயம்வரம் தொடங்கியது. இளவரசி சுயம்வர மண்டபத்தைச் சுற்றிச் சுற்றி வந்தாள். வந்திருந்த யாரையுமே அவளுக்குப் பிடிக்கவில்லை. அந்தநேரம் பார்த்து முகத்தில் சாந்தம் நிறைந்த இளம் துறவி ஒருவர், சுயம்வர மண்டபத்துக்குள் நுழைந்தார். அந்த இளம் துறவியைப் பார்த்ததுமே, இளவரசிக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவருக்கு, தன் கையில் இருந்த மாலையைச் சூட்டப் போனாள். பதறி விலகிய அந்த இளம் துறவி, ‘‘நான் துறவி, உன்னை என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது’என்று மறுத்துவிட்டார். ஆனால், இளவரசி பிடிவாதமாக இருக்கவே, அரசர் அந்த இளம் துறவியிடம், ‘‘என் பெண்ணை திருமணம் செய்துகொண்டால் என்னுடைய நாட்டுக்கே நீங்கள் அரசர் ஆகலாம்’என்று கூறினார். அதற்கு ஒப்புக்கொள்ளாத துறவி, மண்டபத்தில் இருந்து வேகமாக வெளியேறி விட்டார். அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பிய இளவரசி, அந்த துறவிக்குப் பின்னாலேயே செல்லத் தொடங்கி விட்டாள். சுயவரத்தை வேடிக்கைப் பார்க்கச் சென்ற, அந்தத் துறவியும், அரசரை அழைத்துக்கொண்டு இளவரசிக்குத் தெரியாமல் பின் தொடர்ந்தார். அந்த இளம் துறவி பல மைல்கள் நடந்து சென்று, ஒரு காட்டுக்குள் நுழைந்து, மறைந்துவிட்டார். அவரைக் காணாமல் தவித்த இளவரசி, ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்துகொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். அப்போது இளவரசிக்கு அருகில் வந்த துறவியும் அரசரும், ‘‘இளவரசியே, இப்போது இருட்டிவிட்டதால், இன்றைய இரவை இந்த மரத்தடியில் கழித்துவிட்டு, விடிந்ததும் உன்னை அழைத்துச் சென்று உன்னுடைய அரண்மனையில் விட்டுவிடுகிறோம்’என்றனர். வேறு வழி இல்லாததால் இளவரசியும் சம்மதித்தாள்.

அந்த மரத்தில், இரண்டு பறவைகள் குடும்பம் நடத்தின. ‘தங்கள் மரத்தின் அடியில் வந்து தங்கியிருக்கும் இம்மூவரையும் உபசரிப்பது தங்களுடைய கடமை’என்று நினைத்த ஆண் பறவை, எங்கோ சென்று எரிந்துகொண்டு இருந்த ஒரு சுள்ளியை எடுத்து வந்து அவர்களுக்கு அருகில் போட்டது. அரசரும் துறவியும் மேலும் சில சுள்ளிகளைப் போட்டு அக்னி வளர்த்து, அந்த வெப்பத்தில் குளிரைப் போக்கிக் கொண்டனர். பின் அந்த ஆண் பறவை, தன் துணையிடம், ‘‘நம்முடைய விருந்தினர்கள் பசியுடன் இருக்கிறார்கள். அவர்களை உபசரிப்பது நமது கடமை. எனவே, நான் தீயில் விழுந்து விடுகிறேன். என்னை உண்டு அவர்கள் பசியாறட்டும்’என்று சொல்லியபடியே தீயில் விழுந்துவிட்டது. பின்னர், பெண் பறவை, தன்னையும் அவர்களுக்கு இரையாக்க நினைத்து, குஞ்சுகளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு தீயில் விழுந்துவிட்டது. தாய்ப் பறவையைத் தொடர்ந்து, மூன்று குஞ்சுகளும் தங்கள் பெற்றோர்களைப் போலவே தங்களையும் அவர்களுக்கு இரையாக்க நினைத்து தீயில் விழுந்து விட்டன. துறவியும், அரசரும், இளவரசியும் பறவைகளின் தியாகத்தைக் கண்டு சிலிர்த்துப் போனார்கள். அதற்குப் பிறகு அவர்களால் எப்படி பசியாற முடியும்? பசியுடனே இருந்த மூவரும், பொழுது விடிந்ததும் காட்டில் இருந்து புறப்பட்டனர்.

இளவரசியை அரண்மனையில் விட்டுவிட்டுத் திரும்பும்போது,  துறவி தன்னுடன் இருந்த அரசரிடம், ‘‘அரசே, அவரவர் நிலையில் அவரவர் உயர்ந்தவர் என்பதை நீர் இப்போது புரிந்துகொண்டிருப்பீர் என்று நம்புகிறேன். உலகைத் துறந்து வாழ விரும்பினால், மிக அழகான இளம்பெண்ணையும், பேராசையையும் உதறிச் சென்ற அந்த இளம் துறவியைப் போல் இருங்கள். அவரவர் நிலையில் அவரவர் பெரியவரே. ஆனால், ஒருவருடைய கடமை மற்றவருடைய கடமையாக ஆகாது என்றார். அரசரும் அதைப் புரிந்துகொண்டு, துறவியை வணங்கி விடைபெற்றார்.

ஒவ்வொருவரும் அவரவர் நிலையையும், அவரவர் திறமையையும் புரிந்துகொண்டு, செயல்பட்டால், பிரச்சனைகள் இருக்காது. மாறாக, தன்னிடம் இல்லாத ஒன்றிற்கும், தகுதியில்லாத இடத்திற்கும் ஆசைப்படுவது ஆபத்தில்தான் முடியும். தமிழன், தன்னிடம் இருக்கின்ற உணர்ச்சிக் கொந்தளிப்பையும், கண்மூடித்தனமான தலைவன் வழிபாட்டையும் தவிர்த்து, தனது தகுதியிலும், திறமையிலும் நம்பிக்கை வைத்து, தன் காலில் நின்றால், வாழ்வில் முன்னேறலாம். குளிர்ந்த சிந்தனை, மிகுந்த கருணை, எதிர்பாரா அன்பு உள்ளவர்களே, உலகில் உயர்ந்து நிற்கின்றனர். நிதானமாகச் சிந்தித்து, உறுதியோடு செயல்பட்டு, மனநிறைவோடு விட்டுக்கொடுத்தால் வாழ்வு சிறக்கும் என்பது உறுதி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.