2017-01-16 15:36:00

பாசமுள்ள பார்வையில்.. மகனே என் அன்பை நினைத்துக்கொள்


அடிக்கடி நிலநடுக்கங்கள் இடம்பெறும் ஜப்பானில், ஒருசமயம், கடுமையான நிலநடுக்கம் நடந்த பின்னர், மீட்புக்குழு ஒன்று, ஓர் இளம் தாயின், இடிந்துபோன வீட்டிற்குச் சென்றது. அங்கே, இடிபாடுகளுக்கு நடுவே, அந்தத் தாயின் உடலை, அக்குழுவினர் கண்டனர். அவ்வுடல், ஒரு பிரார்த்தனைக்காக மண்டியிட்டிருப்பது போன்று, முழந்தாளிட்ட வண்ணம் முன்னோக்கி வளைந்திருந்தது. சுருட்டிய துணிக் குவியல் ஒன்று, அவரது இரு கைகளையும் தாங்கி நின்றிருந்தது. இடிந்து விழுந்த வீடு, அவர் முதுகிலும் தலையிலும் பலத்த காயங்களை ஏற்படுத்தியிருந்தது. குளிர்ந்து விறைத்திருந்த அப்பெண்ணின் சடலம், சற்று வித்தியாசமாக இருந்ததால், அந்தக் குழுத்தலைவரின் உள்ளத்தில் ஓர் உள்ளுணர்வு. அவர், அந்தத் தாய்க்கு அடியில் இருந்த துணிக் குவியலை கைகளால் தடவிப் பார்த்தார். அதில், ஒரு குழந்தை இருந்ததைக் கண்டு, மற்றவர்களையும் உடனடியாக, அவர் உதவிக்கு அழைத்தார். எல்லாரும் சேர்ந்து, அந்தத் தாயின் சடலத்தை மூடியிருந்த சிதைவுகளை, மிகக் கவனமாக அகற்றினர். தாயின் சடலத்தின் அடியில், இன்னும் உறக்கம் கலையாத, மூன்று மாதப் பிஞ்சுக் குழந்தை, பூப்போட்ட ஒரு போர்வைத் துணிக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழந்தையைக் கையில் எடுத்தபோதும், அதன் அமைதியான உறக்கம் கலையவில்லை. குழந்தையின் உடல்நிலையைப் பரிசோதிப்பதற்காக மருத்துவர் அவசரமாக அழைக்கப்பட்டார். குழந்தையைச் சுற்றியிருந்த பூத்துணியை திறந்தபோது அதற்குள் ஒரு கைபேசி இருந்தது. அதன் முகப்பில் ஒரு text message : ”மகனே, நீ உயிர் பிழைத்தால், நான் உன்னை அன்புகூர்கிறேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்”என்ற அந்தச் செய்தியை, ஒருவர் மாற்றி ஒருவர் வாசித்தனர். வாசித்த ஒவ்வொருவரது உள்ளமும் விம்மியழுதது.

தாயன்பிற்கு இணையேதும் உண்டோ? ஆம். தாயிற் சிறந்ததொரு கோவில் இல்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.