2017-01-14 14:48:00

பாசமுள்ள பார்வையில்... அடையாளம் தந்த அன்னை சரோஜா


தமிழகத்தின் தீவட்டிப்பட்டி கிராமம் (சேலம் மாவட்டம்) தமிழர்கள் பலருக்கும்கூட அறிமுகமில்லாத ஒரு கிராமம். அந்தக் கிராமத்தை உலக வரைப்படத்தில் பெருமைக்குரிய ஒரு புள்ளியாக, ஒரு திலகமாகப் பதித்தவர், மாரியப்பன் தங்கவேலு.

2016ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், பிரேசில் நாட்டின் ரியோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் விளையாட்டில், உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாரியப்பன் அவர்கள், தீவட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.

மாரியப்பனின் வெற்றிக்கு வழிவகுத்தவர், அவரது அன்னை சரோஜா. திருமண வாழ்வில் தோல்வியைக் கண்டாலும், தன் குழந்தைகளை, தனியொரு தாயாக, போராடி வளர்த்தவர், சரோஜா.

ஐந்து வயதான மாரியப்பன், பள்ளிக்குச் செல்லும் வழியில், குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓர் ஓட்டுனரால், சிறுவன் மாரியப்பனின் வலது கால் மீது பேருந்து ஏறி, அது பெருமளவு சிதைந்துபோனது. இருப்பினும், அச்சிறுவன் தன் இயல்பு வாழ்வையும், விளையாட்டுக்களையும் தொடர, அன்னை ஊக்குவித்தார்.

"மாரியப்பனும், அவனது தம்பிகளும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதை நான் அனுமதித்தேன். அவர்களுக்கு அளிக்கும் சுதந்திரம் மட்டும்தான் அவர்களுக்கு என்னால் தரமுடிந்த செல்வமாக இருந்தது. வளரும்போது, மாரியப்பன் பரிசு வாங்கும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லக்கூட எனக்கு நேரம் இருந்ததில்லை" என்று அன்னை சரோஜா ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் வரை, தீவட்டிப்பட்டி கிராமத்தினர், இந்தக் குடும்பத்தின் மீது அதிக கவனம் செலுத்தவில்லை. கால் ஊனமுற்ற மகன் இருந்ததால், வாடகை வீடு கிடைப்பதற்கும் அதிகம் போராட வேண்டியிருந்தது.

"எனது மகன் பாரலிம்பிக்ஸ் போட்டிக்காகச் சென்றது எங்கள் ஊரில் பலருக்கும் தெரியாது. தொலைக்காட்சியில் மாரியப்பன் தங்கம் வென்றதைப் பார்த்த பலருக்கு அதை நம்ப முடியவில்லை'' என்றார், அன்னை சரோஜா.

தமிழர் திருநாளான பொங்கலன்று, அன்னை சரோஜாவையும், இளையவர் மாரியப்பனையும் பெருமையுடன் எண்ணி, தலை நிமிர்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.