2017-01-14 15:45:00

திருத்தந்தை, பாலஸ்தீனத் தலைவர் Abbas சந்திப்பு


சன.14,2017. பாலஸ்தீனத் தலைவர் Mahmoud Abbas அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தில், தனியே சந்தித்து உரையாடினார்.

திருத்தந்தையின் நூலகத்தில், ஏறக்குறைய 23 நிமிடங்கள் திருத்தந்தையை சந்தித்துப் பேசிய பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீடத்தின் நாடுகளுடன் உறவுகள் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகெர் ஆகிய இருவரையும் சந்தித்தார் பாலஸ்தீனத் தலைவர் Abbas.

திருப்பீடத்திற்கும், பாலஸ்தீனாவுக்கும் இடையே, தொடர்ந்து நல்லுறவுகள் நிலவுவதாக, இச்சந்திப்பில், தங்கள் திருப்தியை வெளியிட்ட இத்தலைவர்கள், மனித மாண்பை முன்னேற்றுதல், கல்வி, நலவாழ்வு, மற்றும் பிற தேவையில் இருப்போருக்கு உதவுதல் ஆகியவற்றில், கத்தோலிக்கத் திருஅவை வகித்துவரும் முக்கிய பங்கையும் நினைவுகூர்ந்தனர்.

மத்திய கிழக்கில் அமைதி குறித்தும், கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட  இத்தலைவர்கள், அப்பாவி மக்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட முடியாத துன்பங்களைக் கொண்டுவரும் வன்முறையை நிறுத்துவதற்கு, இவ்விவகாரத்தோடு தொடர்புடைய தரப்பினர், நேரடி உரையாடலைத் தொடங்கி, நீதியும், நிலையானதும், எல்லாரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான ஒரு தீர்வுக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தனர்.

புனித பூமியில், மூன்று முக்கிய மதங்களின் புனித இடங்களின் தூய்மை காக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும், இத்தலைவர்கள் குறிப்பிட்டனர் என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

எருசலேமின் கொல்கத்தா குன்றிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கல்லில், இயேசுவின் திருமுகம் பொறிக்கப்பட்ட ஒரு நினைவுச் சின்னம், ஒரு திருக்குடும்பப் படம், பெத்லகேம் இயேசு பிறப்பு பசிலிக்கா புதுப்பிக்கப்பட்டது பற்றிய ஒரு காணொளிப்படம், திருப்பீடத்திற்கும், பாலஸ்தீனாவுக்கும் இடையேயுள்ள உறவுகள் பற்றிய நூல் ஆகியவற்றை, இச்சந்திப்பின்போது, திருத்தந்தைக்கு அளித்தார் பாலஸ்தீனத் தலைவர்.

திருத்தந்தையும், "அன்பின் மகிழ்வு (Amoris laetitia)", "இறைவா உமக்கே புகழ்  (Laudato si)" ஆகிய இரண்டின் அரபு மொழிப் பதிப்புக்களை, பாலஸ்தீனத் தலைவருக்கு அளித்தார்.

மத்திய கிழக்கில் அமைதி குறித்து, பாரிசில், இஞ்ஞாயிறன்று தொடங்கும் கருத்தரங்கிலும் கலந்துகொள்ளவுள்ளார் பாலஸ்தீனத் தலைவர் Abbas. இக்கருத்தரங்கில், ஏறக்குறைய எழுபது நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர் எனச் செய்திகள் கூறுகின்றன.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.