2017-01-13 16:13:00

மாமன்றத் தயாரிப்பு ஏடு, திருத்தந்தை இளையோருக்குக் கடிதம்


சன.13,2017. “இளையோர், விசுவாசம் மற்றும், இறையழைப்பைத் தேர்ந்து தெளிதல்” என்ற தலைப்பில், 2018ம் ஆண்டு அக்டோபரில், உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறும் என்பதை அறிவிப்பதில் மகிழ்வடைகிறேன், என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக இளையோருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் கூறியுள்ளார்.

இளையோர் பற்றி, 2018ம் ஆண்டு அக்டோபரில், வத்திக்கானில் நடைபெறவிருக்கும், 15வது உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்பு ஏடு, இவ்வெள்ளியன்று, செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டதை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோருக்கு, இவ்வெள்ளியன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இளையோராகிய நீங்கள், என் இதயத்தில் இருப்பதால், நீங்கள் கவனம் செலுத்தப்பட வேண்டும் என விரும்பினேன் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இந்நாளில் வெளியிடப்படும், மாமன்றத் தயாரிப்பு ஏட்டை, மாமன்றப் பயணத்தில், உங்களின் திசைமானியாக, நான் வழங்குகிறேன் என்றும் கூறியுள்ளார்.

எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அறியாத ஒரு புதிய பூமிக்குச் செல்ல வேண்டுமென, ஆபிரகாமுக்குக் கடவுள் கொடுத்த அழைப்பு, சவால் நிறைந்தது என்று கூறியுள்ள திருத்தந்தை, இளையோரே, இந்தப் புதிய பூமி, இக்காலத்தில், நீங்கள் அமைக்க விரும்பும் நீதியும், நட்பும் நிறைந்த சமுதாயம் அல்லவா? என்றும் கேட்டுள்ளார்.

ஆனால், இக்காலத்தில், செல் என்பது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தல், அநீதி, போர் போன்ற பல்வேறு பெயர்களைக் கொண்டிருக்கின்றது என்றும், இளையோரில் பலர், வன்முறையின் அச்சுறுத்தலுக்கும், தங்களின் சொந்த நாட்டை விட்டு கட்டாயமாக வெளியேற வேண்டிய சூழலுக்கும், உள்ளாகின்றனர் என்றும், கவலை தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அநீதியையும், புறக்கணிப்புக் கலாச்சாரத்தையும் ஏற்றுக்கொள்ள இயலாது என, போலந்தின் கிராக்கோவில் உலக இளையோர் தினத்தில், இளையோர் தன்னிடம் தெரிவித்ததைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இளையோர், தூய ஆவியாரின் குரலுக்குச் செவிமடுக்க அஞ்ச வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இறையழைப்பின் குரலுக்குச் செவிமடுக்குமாறும், சமுதாயத்தில் இளையோருக்கு இருக்கின்ற கடமைகளை நிறைவேற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோரை, நாசரேத் அன்னை மரியின் பாதுகாவலில் அர்ப்பணிப்பதாக, தனது கடிதத்தை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.