2017-01-13 16:32:00

கட்டாயமாக, தனியாகப் புலம்பெயரும் சிறாருக்காகச் செபிப்போம்


சன.13,2017. “கட்டாயமாக, அதிலும் குறிப்பாக, தனியாகப் புலம்பெயரும் சிறார் மிகவும் பாதுகாப்பற்றவர்கள் மற்றும், நலிந்தவர்கள். எனவே அவர்களுக்காகச் செபிப்போம் மற்றும் உதவுவோம்”என்பது, இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் வெளியாயின.

மேலும், இத்தகைய சிறார் பற்றித் தெரிவித்த யூனிசெப் நிறுவனத்தின் Lucio Melandri அவர்கள், 2016ம் ஆண்டில், இத்தாலிக்கு, கடல் வழியாக, யாருடைய துணையுமின்றி ஏறக்குறைய 25,800 சிறார் வந்தனர் என்றும், இவ்வெண்ணிக்கை, 2015ம் ஆண்டைவிட இருமடங்கு அதிகம் என்றும், 2015ம் ஆண்டில், இவ்வாறு வந்த சிறார் 12,360 என்றும், கூறினார்.

இவ்வாறு வந்த சிறாரில் பெரும்பாலானவர்கள் 15க்கும் 17 வயதுக்கும் உட்பட்ட வளர்இளம் பருவ ஆண்கள் என்றும், இவர்கள், பெரும்பாலும், எரிட்ரியா, எகிப்து, காம்பியா, நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், Melandri கூறினார்.

மேலும், ஐரோப்பாவில் கடும் குளிரால் மக்கள் துன்புறும்வேளை, சான் எஜிதியோ கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு, உரோம், த்ரஸ்தேவரே புனித கலிஸ்தோ ஆலயத்தை, வீடற்றவர்களுக்குத் திறந்துவிட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு மாதச் செபக் கருத்துப் பற்றிப் பேசும் காணொளியை, கடந்த ஆண்டில், ஒரு கோடியே முப்பது இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளனர்.

"திருத்தந்தையின் காணொளி (The Pope Video)" என்ற தலைப்பில், 2016ம் ஆண்டு சனவரியில், தொடங்கப்பட்ட 90 விநாடிகள் கொண்ட இக்காணொளி வழியாக, திருத்தந்தையின் உலகளாவிய செப அமைப்பில் கத்தோலிக்கர் இணைவதற்கு அழைப்பு விடுக்கப்படுகின்றனர்.

உலகளாவிய இயேசு சபையின், திருத்தூதுச் செபம் என்ற அமைப்பு, திருத்தந்தையின் ஒவ்வொரு மாதச் செபக் கருத்துக்களை, 170 ஆண்டுகளுக்கு மேலாக வெளியிட்டு, மக்கள் செபிப்பதற்குத் தூண்டி வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.