2017-01-13 16:05:00

இயேசுவைப் பின்செல்வது எளிமையானதல்ல, ஆனால் இனிமையானது


சன.13,2017. பால்கனியிலிருந்து வாழ்வை நோக்குபவர்களாகவும், பிறரைத் தீர்ப்பிடுபவர்களாகவும், கிறிஸ்தவர்கள் இருக்கக் கூடாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை திருப்பலியில் கூறினார்.

கப்பர்நாகுமில், இயேசு இருந்த வீட்டின் மேல்கூரையின் வழியாக, முடக்குவாதமுற்றவரை படுக்கையோடு இறக்கிய இந்நாளைய திருப்பலியின் நற்செய்தி வாசகத்தை  மையப்படுத்தி, மறையுரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையான விசுவாசம், சவால்களைச் சந்திப்பதற்குத் தயாராக இருக்கும் என்று கூறினார். இயேசு கூறிய காரியங்கள், அவற்றை அவர் கூறிய முறை போன்றவற்றால் கவரப்பட்டு, மக்கள் அவரிடம் சென்றனர், அவர்கள் அவரைப் புரிந்துகொண்டனர், அவர் அவர்களைக் குணப்படுத்தினார், அவரால் குணப்படுத்தப்படும்படி பலர் அவரைப் பின்சென்றனர் என்றும் கூறியத் திருத்தந்தை, இறைவார்த்தையைவிட, தங்களின் சொந்த நலனில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த மக்களை, இயேசு எச்சரிக்கை செய்த நேரங்களும் உண்டு என்றும் கூறினார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் ஆற்றிய மறையுரையில், இவ்வாறெல்லாம் கூறியத் திருத்தந்தை, இயேசு, தகுதியான அரசியல்வாதி என்று நினைத்து அவரை அரசராக்க விரும்பிய மனிதர்களும் இருந்தனர் என்றும் கூறினார்.

இயேசுவைப் பின்சென்றவர்களால் அல்ல, ஆனால், தாங்கள் இருந்த இடத்திலே நகராமல் இருந்து, கவனித்துக் கொண்டிருந்தவர்களாலேயே பெரிய பிரச்சனை ஏற்பட்டது எனவும், அவர்களின் வாழ்வு பயணமாக இல்லை, ஆனால், அவர்களின் வாழ்வு, பால்கனியாக இருந்தது எனவும் திருத்தந்தை தெரிவித்தார்.   

முப்பத்தெட்டு ஆண்டுகளாய், உடல்நலமற்றிருந்த மனிதர் ஒருவர், பெத்சதா குளத்தருகில் நகராமல் இருந்தது பற்றியும் கூறியத் திருத்தந்தை, இயேசுவைச் சந்திப்பது என்பது, இடர்களை எதிர்கொள்வதாகும் எனவும், இயேசுவைப் பின்செல்வது எளிமையானதல்ல, ஆனால் இனிமையானது, எப்போதும் இடம் நிறைந்தது எனவும் கூறினார்.

இயேசுவைப் பின்சென்றவர்கள், ஆபத்துக்களைச் சந்திப்பதற்குத் தயாராக இருந்தனர் எனவும் கூறியத் திருத்தந்தை, நம்பிக்கையின்றி, தேக்கநிலையில் இருக்கும் ஆன்மா குறித்து விழிப்புடன் இருக்குமாறும், மறையுரையில் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.