2017-01-13 16:18:00

15வது உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்பு ஏடு வெளியீடு


சன.13,2017. உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலர் கர்தினால் லொரென்சோ பால்திச்சேரி, அம்மாமன்ற நேரடிச் செயலர் ஆயர் Fabio Fabene, உரோம் நகரின் இளையோர் Elvis Do Ceu Nicolaia Do Rosario, Federica Ceci, ஆகியோர் கொண்ட குழு, இவ்வெள்ளியன்று, செய்தியாளர் கூட்டத்தில், 15வது உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்பு ஏட்டை வெளியிட்டது.

இவ்வேட்டிலுள்ள வினாப் பட்டியல், உலகின் ஆயர் பேரவைகளுக்கும், கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளுக்கும் மற்றும் பிற நிறுவனங்களுக்கும் அனுப்பப்படும்.

இந்த ஏட்டின் அமைப்பு பற்றி, இக்கூட்டத்தில் விளக்கிய கர்தினால் பால்திச்சேரி அவர்கள், இந்த ஏடு, மூன்று பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது எனவும், இன்றைய உலகில் இளையோர் என்பது பற்றி முதல் பிரிவும், விசுவாசம், தேர்ந்து தெளிதல் அழைப்பு பற்றி இரண்டாவது பிரிவும், மேய்ப்புப்பணி நடவடிக்கைகள் என்பது பற்றி மூன்றாவது பிரிவும் விளக்குகின்றன என்று தெரிவித்தார்.

இளையோரின் குரல், அவர்களின் விசுவாசம், அவர்களின் உணர்வுகள், அவர்களின் சந்தேகங்கள், விமர்சனங்கள் என, எல்லாவற்றையும் அகிலத் திருஅவை கேட்கவுள்ளது என்பதால், இம்மாமன்றத் தயாரிப்புப் பயணத்தில், இளையோர் ஆர்வமுடன் பங்கேற்குமாறும், கர்தினால் பால்திச்சேரி அவர்கள், கேட்டுக்கொண்டார்.

மேலும், இக்கூட்டத்தில் பேசிய இரு இளையோர், உலக இளையோரின் துன்பங்கள், பலவீனங்கள் போன்றவை பற்றி மட்டும் பேசாமல், இளையோர் பற்றிய நல்ல செய்திகளை, அதிகமாக வழங்குமாறு, ஊடகங்களைக் கேட்டுக்கொண்டனர். இம்மாமன்றம், 16 முதல் 29 வயது வரையுள்ள இளையோர் பற்றியதாய் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.