2017-01-12 14:34:00

இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு


சன.12,2017. இந்தியாவில் கடந்த ஆண்டில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்று, இப்புதனன்று வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

Open Doors என்ற குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுகளாக, 2017 World Watch List என்ற பெயரில் வெளியான இப்பட்டியலில், கிறிஸ்தவர்கள் மிக அதிக அளவில் தாக்குதல்களை எதிர்கொள்ளும் நாடாக, வட கொரியா முதலிடம் பெற்றுள்ளது.

கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலை, இக்குழுவினர், நான்கு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டபோது, 31வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த ஆண்டு, 15வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

வட கொரியாவைத் தொடர்ந்து, கிறிஸ்தவர்கள் அதிகம் தாக்கப்படும் நாடுகளாக சொமாலியா, பாகிஸ்தான் மற்றும் சூடான் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஈராக், மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் அதிகமாகத் தாக்கப்பட்டனர் என்று நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய அறிக்கை கூறிய வேளையில், கடந்த நான்கு ஆண்டுகளில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறைந்துள்ளதைப்போல் தெரிவதற்குக் காரணம், அப்பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்கள் மிக அதிக அளவில் வெளியேறி இருப்பதே என்று, Open Doors குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

2015ம் ஆண்டைக் காட்டிலும், 2016ம் ஆண்டில் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டுள்ள நிகழ்வுகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளன என்றும், இத்தாக்குதல்களுக்கு இந்து அடிப்படைவாத குழுக்களே காரணம் என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக Open Doors நடத்திவரும் இந்த ஆய்வுகளில், 16 முறை வட கொரியாவும், 7 முறை சவுதி அரேபியாவும், இருமுறை சொமாலியாவும் முதல் இடங்களைப் பெற்றுள்ளன என்று கத்தோலிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : TheGuardian / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.