2017-01-11 16:06:00

புலம்பெயர்ந்தவர் அலுவலகத்தின் முதல் சமூக வலைத்தளம்


சன.11,2017. “எவரும் மற்றவரை, புறக்கணிப்போடு நோக்காத இரக்கக் கலாச்சாரம் கொண்டுவரப்படுவதற்கு, ஒவ்வொருவராலும் உதவ இயலும்”என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இப்புதனன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், திருப்பீடத்தின் புதிய ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் துறையின் புலம்பெயர்ந்தவர் மற்றும், குடிபெயர்ந்தவர் அலுவலகம், தனது முதல் சமூக வலைத்தளத்தை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது.

சனவரி 15, வருகிற ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும், 103வது உலக புலம்பெயர்ந்தவர் நாளையொட்டி, இந்தப் புதிய வலைத்தளம் தொடங்கப்படுகின்றது என்றும், சனவரி 12, இவ்வியாழன் முதல், சனவரி 15, வருகிற ஞாயிறு வரை, திருத்தந்தை வெளியிடும் டுவிட்டர் செய்திகளும், புலம்பெயர்ந்தவர் மற்றும், குடிபெயர்ந்தவர் பற்றியே அமைந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டுவிட்டர், நேரிடையாக முகநூலோடு இணைக்கப்பட்டிருக்கும் எனவும், ஒவ்வொரு நாள் கருத்துக்கு ஏற்ற சிறிய கதையும், முகநூலில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவராகப் பணியாற்றிய, கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், புதிய ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் துறையை தலைமையேற்று நடத்தி வந்தாலும், அத்துறையின் புலம்பெயர்ந்தவர் மற்றும், குடிபெயர்ந்தவர் அலுவலகத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே தற்போது நடத்தி வருகிறார்.

திருத்தந்தையின் இந்நடவடிக்கை, இவ்வுலகில், தொடர்ந்து இடம்பெறும் புலம்பெயர்ந்தவர் பிரச்சனை குறித்து, திருத்தந்தை கொண்டிருக்கும் மிகுந்த அக்கறையைக் காட்டுவதாக உள்ளது.

புலம்பெயர்ந்தவர் மற்றும், குடிபெயர்ந்தவர் அலுவலகத்தின் டுவிட்டர் முகவரிகள் -

ஆங்கிலம் - https://twitter.com/M_RSection  இத்தாலியம் - https://twitter.com/M_RSezione இஸ்பானியம் - https://twitter.com/M_RSeccion  பிரெஞ்ச் - https://twitter.com/M_RSection_Fr   முகநூல்: https://www.facebook.com/MandRSection/

LinkedIn: https://www.linkedin.com/company/migrants-&-refugees-section

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.