2017-01-11 15:51:00

புதன் மறைக்கல்வியுரை : பொய் தெய்வங்களில் வீண் நம்பிக்கை


சன.,11,2017. ஐரோப்பா முழுவதும் குளிர்காலம் துவங்கிவிட்ட நிலையில், உரோம் நகரில் இந்த ஆண்டு குளிர் மிக அதிகமாகவே உள்ளது, அதிலும் இப்புதனன்று, கடுமையாகவே இருந்தது. இருப்பினும், திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி போதகத்திற்கு வந்திருந்த திருப்பயணிகள் கூட்டம், அருளாளர் ஆறாம் பவுல் அரங்கை நிறைத்திருக்க, "பொய் தெய்வச்சிலைகளில் நம்பிக்கை வைத்தல்" என்ற தலைப்பில், 115 ம் திருப்பாடலின் வரிகளான,

அவர்களுடைய தெய்வச்சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே, வெறும் மனிதக் கைவேலையே!

அவற்றுக்கு வாய்கள் உண்டு; ஆனால் அவை பேசுவதில்லை; கண்கள் உண்டு; ஆனால் அவை பார்ப்பதில்லை;

அவற்றைச் செய்கின்றோரும் அவற்றில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவற்றைப்போல் ஆவர்.

இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது நம்பிக்கைக் கொள்ளுங்கள்; அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார்.

ஆரோனின் குலத்தாரே! ஆண்டவர்மீது நம்பிக்கைக் கொள்ளுங்கள்; அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார்.

ஆண்டவருக்கு அஞ்சி நடப்போரே! அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார்.

என்பதை மையமாக வைத்து, தன் உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மீட்பரின் வருகை குறித்த வாக்குறுதி நிறைவேறிய, 'திருவருகைக்காலம்' 'கிறிஸ்து பிறப்பு' ஆகியவைகளைத் தொடர்ந்து வரும் இந்த புத்தாண்டின் முதல் நாள்களில், கிறிஸ்தவ நம்பிக்கைக் குறித்த நம் மறைக்கல்வி உரையை இப்போது தொடர்வோம். கடவுளின் வார்த்தையின் மீதான விசுவாசத்தில் பிறக்கும் உண்மையான நம்பிக்கையைக் கொண்டிருக்கும் அதேவேளை, பணம், அதிகாரம், வெளி அழகு போன்ற உலக சிலை வழிபாடுகள் தரும் பொய்யான நம்பிக்கைகளால் நாம் சோதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. கடவுளிலான நம்பிக்கை, பலத்தையும், விடாப்பிடியான தொடர்நிலையையும் எதிர்பார்க்கிறது. ஆனால், பொய் தெய்வங்களில் வைக்கும் நம்பிக்கையோ, எளிதான பாதுகாப்பையும், நம் கட்டுப்பாட்டுக்குள் வருங்காலம் உள்ளது என்ற பொய் நம்பிக்கையைத் தருகிறது.

திருப்பாடல் ஆசிரியர் இத்தகைய பொய் தெய்வ வழிபாட்டைக் கண்டிக்கிறார். மனிதரின் கைகளால் உருவாக்கப்பட்ட இந்த தெய்வச் சிலைகளில் நம்பிக்கை வைப்போர், இச்சிலைகளைப் போலவே ஆன்மீக முறையில் விழியிழந்தோராயும், செவியிழந்தோராயும், உணர்வற்றோராயும் இருப்பர் என்கிறார் திருப்பாடல் ஆசிரியர். நம்மைவிட உயர்ந்தவர் கடவுள். நம்மை, தன் சாயலில் படைத்த கடவுளை நாம், நம் அளவுக்கு கீழிறக்கிக் கொணர முடியாது. அல்லது, நம் சாயலைப் போலவோ, நம் விருப்பத்திற்கு இயைந்தாற்போலவோ, நம் கைகளால் உருவாக்க முடியாது. அவரின் வார்த்தைகளில் விசுவாசம் கொண்டு, அவரின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைக்கும்போது நாம், மேலும் மேலும் அவரைப்போல் மாறுகின்றோம். அது மட்டுமல்ல, தன் மகனின் பிறப்பு, இறப்பு மற்றும் உயிர்ப்பில் தன்னை வெளிப்படுத்திய இறைவனின் வாழ்வில் பங்குபெறுவதோடு, அவரின் அக்கறையுடன்கூடிய பராமரிப்பில் மகிழ்ச்சி கொள்கின்றோம்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதன் மறைக்கல்வி உரையை கேட்க வருபவர்களுக்கு வழங்கப்படும் அனுமதிச் சீட்டு இலவசமானது, யாராவது அதற்கு பணம் வசூலிக்க முயன்றால், அவர்கள் ஏமாற்றுக்காரர்கள், அவர்களிடம் ஏமாறாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டார். உரையின் இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.








All the contents on this site are copyrighted ©.