2017-01-11 15:27:00

சாம்பலில் பூத்த சரித்திரம் – திருத்தூதர்கள் காலம்


சன.11,2017. வலியின்றி வரலாறு இல்லை. வழி செல்லாவிடில், வரலாற்றில் உன் வரலாறு இல்லை என்று பெரியவர்கள் சொன்னார்கள். திருஅவையின் வரலாறும், வலிகளின் வரலாறைக் கொண்டதுதான். இந்த வரலாற்றில், இரத்த ஆறுகள் வற்றாமல் ஓடின. இன்றும் அந்த ஆறுகள் வற்றவில்லை. கிறிஸ்துவுக்காக, ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்கள் கழுத்தை கழுமரத்திற்குக் கொடுத்திருக்கின்றனர், வாளுக்கும், கொடிய விலங்குகளுக்கும் இரையாக்கி இருக்கின்றனர். பட்டினி போடப்பட்டு, பசியால் மடிந்துள்ளனர். இவ்வாறு, எத்தகைய சுனாமிக்கு மத்தியிலும், தளராது, அழியாது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து வருவது இயேசு கிறிஸ்துவின் திருஅவை. இத்திருஅவையின் வரலாற்றை, திருத்தூதர்கள் காலம், தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள் காலம், திருஅவைத் தந்தையர் காலம், மத்திய காலம், கிறிஸ்தவத்தில் பிரிவினை தோன்றிய காலம், நவீன காலம், இக்காலம் என, வரலாற்று ஆசிரியர்கள் வகைப்படுத்துகின்றனர். உயிர்த்த இயேசு, தம் திருத்தூதர்களிடம், உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர் (மாற்.16,15) என்று சொன்னார். கிறிஸ்தவ வரலாற்றில், திருத்தூதர்கள் காலம் என்பது, ஏறக்குறைய கி.பி.33ம் ஆண்டில், உயிர்த்த இயேசு, எருசலேமில், தம் பன்னிரு திருத்தூதர்களுக்கும், நற்செய்தியை பறைசாற்ற இட்ட இந்த மாபெரும் ஆணையிலிருந்து  தொடங்குகிறது. அனத்தோலியாவில், ஏறக்குறைய கி.பி.96ம் ஆண்டில், திருத்தூதர் யோவானின் இறப்போடு, இக்காலம் முடிவடைவதாக, சொல்லப்படுகிறது.

திருத்தூதர்கள் வரலாற்றை நாம் புரிந்துகொள்வதற்கு, புதிய ஏற்பாட்டு நூலில், திருத்தூதர் பணிகள் நூலை நாம் வாசிக்க வேண்டும். சீமோன் எனப்பட்ட பேதுரு, அவரின் சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு ஆகிய பன்னிருவரையும் இயேசு தம் திருத்தூதர்களாகத் தேர்ந்தெடுத்தார். ஆனால், யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுத்த பின்னர், அவர் இடத்தை நிரப்புவதற்கு, மத்தியாஸ் என்பவரை, திருத்தூதர்கள் சீட்டுப்போட்டு தேர்ந்தெடுத்தனர். இயேசு, கல்வாரியில், சிலுவையில் அறையுண்டு இறந்த பின்னர், திருத்தூதர்கள் யூதர்களுக்கு அஞ்சி,  எருசலேம் மாடி அறையில், அன்னை மரியாவின் தலைமையில், செபச்சூழலில் கூடியிருந்தனர். எருசலேமில், பெந்தக்கோஸ்து திருவிழா நாளின்போது, திடீரென்று, கொடுங்காற்று வீசுவது போன்ற இரைச்சல், வானத்திலிருந்து உண்டாகி, திருத்தூதர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும், நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள், ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்வதைக் கண்டனர். அவர்கள் அனைவரும் தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியாரின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழிகளில் பேசத் தொடங்கினர்.

அப்போது, உலகின் பல நாடுகளிலிருந்து, எருசலேமுக்கு வந்திருந்த அனைவரும் அவரவர் மொழியில், திருத்தூதர்கள் பேசியதைப் புரிந்துகொண்டனர். இது எப்படி என்று,  அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். அப்போது பேதுரு, பதினொருவருடன் சேர்ந்து எழுந்து நின்று, பேசத் தொடங்கினார். நீங்கள் சிலுவையில் அறைந்த இயேசுவைக் கடவுள், ஆண்டவரும், மெசியாவுமாக ஆக்கினார். கடவுள், இந்த இயேசுவை உயிர்பெறச் செய்தார். இவ்வாறு, இயேசு பற்றி உரை நிகழ்த்தினார் பேதுரு. இந்த உரையைக் கேட்டு, உள்ளம் குத்துண்டவர்களாய், சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என கூட்டத்தினர் கேட்டனர். அங்கு இருந்த மக்களிடம் மாபெரும் விழிப்புணர்வு ஏற்பட்டது. பள்ளிக்கூட வாசனையே அறியாத மற்றும், மீன்பிடித்தொழில் மட்டுமே அறிந்த பேதுருவுக்கு, இவ்வளவு சொல்லாடல் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி நமக்கு எழுகின்றது. எல்லாம் தூய ஆவியின் வல்லமை. அன்று பேதுருவின் உரையைக் கேட்ட மக்களில், ஏறக்குறைய மூவாயிரம் பேர், அன்றே திருமுழுக்குப் பெற்றனர் என, திருத்தூதர் பணிகள் நூல் சொல்கின்றது. இவ்வாறு திருத்தூதர்களால், பெந்தக்கோஸ்து நாளில் திருஅவை பிறந்தது. அதன்பின்னர் திருஅவை நீளத்திலும், அகலத்திலும், ஆழத்திலும் பரவத் தொடங்கியது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த யூத மறைநூல் அறிஞர்களும், ஆலயக் குருக்களும் எரிச்சலடைந்தனர். கிறிஸ்தவத்தின் ஆரம்பமே, எதிர்ப்புக்களோடு வித்திடப்பட்டது. 

நற்செய்தி எங்கெல்லாம் பரவியதோ, அங்கே மக்கள், கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டு, பாவத்திற்கு மன்னிப்பைப் பெற்றனர். ஆண்டவர் இயேசுவுக்காக வாழ விரும்பினர். இயேசுவை அறியாதவர்களிடமும் மனமாற்றம் நடந்தது. இன்றும் இதே நிலையைத்தான் பார்க்கிறோம். நற்செய்தியின்பொருட்டு, உங்களை நீதீமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும்போது என்ன பேச வேண்டும் என்று அஞ்சாதீர்கள். உங்களோடு எந்நாளும் நான் இருக்கிறேன், உங்களில் நான் இருந்து பேசுவேன் என்று சொன்ன இயேசுவின் வாக்கு இன்றும் பொய்க்கவில்லை. இயேசு என்றென்றும் வாக்கு மாறாத தெய்வம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.