2017-01-10 16:06:00

பிலிப்பீன்ஸ் மக்கள் தன்னலத்தைக் கைவிட அழைப்பு


சன.10,2017. தன்னலம் மற்றும் ஆதாயங்களைத் தேடுவதைக் கைவிட்டு, மற்றவருக்குச் சேவையாற்றுவதில், தங்களை அர்ப்பணிக்குமாறு, மணிலா பேராயர், கர்தினால் அந்தோனியோ லூயிஸ் தாக்லே அவர்கள், பிலிப்பீன்ஸ் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

கறுப்பு நசரேன் விழாப் பவனி தொடங்குவதற்கு முன்னர், நள்ளிரவில், திருப்பலி நிறைவேற்றி மறையுரை நிகழ்த்திய, கர்தினால் தாக்லே அவர்கள், இயேசு அன்புகூர்ந்ததுபோன்று அன்புகூருமாறும், மற்றவருக்குத் தொண்டுபுரியும் அன்பே, குடும்பங்கள், பங்குகள், நகரங்கள் மற்றும் நாட்டில் ஒற்றுமையை ஊக்குவிக்கும் என்றும் கூறினார்.

இயேசு, பாவிகளோடு ஒன்றாக இருந்து பெற்ற அவரின் திருமுழுக்கு, அன்பைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது என்றுரைத்த கர்தினால் தாக்லே அவர்கள், இந்த அன்பே, பாவிகளையும், நலிந்தவர்களையும் கண்டனம் செய்யாமல், அவர்களை ஏற்றுக்கொள்ள வைக்கின்றது என்றும் கூறினார்.

மணிலாவில், இத்திங்கள் நள்ளிரவில் தொடங்கிய, கறுப்பு நசரேன் பவனியில், ஏறக்குறைய ஒரு கோடியே 80 இலட்சம் பக்தர்கள் கலந்துகொண்டனர் என, ஆசியச் செய்தி நிறுவனம் கூறுகிறது. பக்தர்களின் பாதுகாப்புக்காக, படைவீரர்கள், காவல்துறையினர், அவசரகாலப் பணியினர் என, ஏறக்குறைய நான்காயிரம் பேர் பணியில் இருந்தனர். 

சிலுவையின் பாரத்தால் தொங்கும் இயேசுவைச் சித்தரிக்கும் கறுப்பு நசரேன் திருவுருவம், 1607ம் ஆண்டில், இஸ்பானிய அகுஸ்தீன் சபை அருள்பணியாளர் ஒருவர், மெக்சிகோவிலிருந்து, கப்பல் வழியாக, மணிலாவுக்குக் கொண்டு வந்தார். இத்திருவுருவம் எடுத்துவரப்பட்ட படகு தீப்பிடித்து எரிந்தது. ஆயினும், இத்திருவுருவம், சேதமடையாமல் இருந்தது எனச் சொல்லப்படுகின்றது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.