2017-01-10 16:16:00

அன்பின் மகிழ்வு மடலுக்கு வேறு விளக்கம் எதுவும் தேவையில்லை


சன.10,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், Amoris Laetitia அதாவது அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடலுக்கு, வேறு விளக்கம் எதுவும் தேவையில்லை என, திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத் தலைவர், கர்தினால் Gerhard Müller அவர்கள் தெரிவித்தார்.

அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடல் குறித்து, ஜெர்மன் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த கர்தினால் Müller அவர்கள், திருத்தந்தையின் இம்மடல், அதன் கோட்பாடுகளில் மிகத்தெளிவாக உள்ளது என்றும், திருமணம் மற்றும், திருநற்கருணை குறித்த, திருஅவையின் பாரம்பரியப் போதனைகளோடு எவ்வித முரண்பாடுகளையும் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

முறைப்படி சேர்ந்து வாழாத தம்பதியர், திருஅவையில், புதிதாக இணைவதற்கான வழியைக் கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு, திருத்தந்தை தனது Amoris Laetitia, திருத்தூது அறிவுரை மடலில், மேய்ப்பர்களைக் கேட்டுள்ளார் என்றும் கூறினார் கர்தினால் Müller.

திருமண முறிவுபெற்று, மீண்டும் திருமணம் செய்யும் கத்தோலிக்கர், திருஅவையில் மீண்டும் ஒன்றிணைவது குறித்த விவகாரத்திற்கு, விசுவாசக்கோட்பாட்டுப் பேராயம், திருத்தந்தையின் ஆணையின்பேரில் விளக்கம் சொல்ல இயலும் என்றும், தொலைக்காட்சிப் பேட்டியில்கூறினார் கர்தினால் Müller. 

ஆதாரம் : CWN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.