2017-01-09 10:32:00

பாசமுள்ள பார்வையில்... வழிகாட்டும் விண்மீன் அன்னை மரியா


விடியற்கால விண்மீன், விடிவெள்ளி என்பது, சூரிய உதயத்திற்கு முன்பாக, கிழக்கில் தோன்றும் வீனஸ் (Venus) கோளுக்கு, பொதுவாகப் பயன்படுத்தப்படும் பெயர். நாய் நாள்களின்(Dog Days ஜூலை03-ஆகஸ்ட்11 வரையுள்ள நாற்பது நாள்கள்) போது, சூரிய உதயத்திற்கு முன்பாக, கிழக்கில் தோன்றும் சிரியுஸ் (Sirius) விண்மீனுக்கும் இந்தப் பெயர் உள்ளது. வானில் தோன்றும் ஒவ்வொரு விண்மீனும், இயேசுவின் அன்னையாகிய தூய மரியாவோடு தொடர்புபடுத்திப் பேசப்படுகின்றது. எனினும்,  விடியற்கால விண்மீன், ஆழ்கடலின் விண்மீன் (Ave maris Stella) என்ற பெயரே, அன்னை மரியாவுக்கு, மிகப் புகழ்பெற்ற பெயராக உள்ளது. இயேசு பிறப்பின்போது, வானில் தோன்றிய விண்மீனே, பெத்லகேம் குடிலில், மரியாவுக்கு உதவிய ஒரே விளக்கு. கிழக்கிலிருந்து இயேசுவைத் தரிசிக்க வந்த மூன்று ஞானிகள், இந்த விண்மீனைக் கண்டே, பெத்லகேம் நோக்கிப் புறப்பட்டனர். பின்னர் அவர்கள், இந்த விண்மீனை, பெத்லகேம் குடிலில், மரியின் கண்களில் பிரதிபலிக்கக் கண்டார்கள். இந்த ஞானிகளுக்கு வழிகாட்டி வந்த அந்த விண்மீன், வழியில் சிறிதுநேரம் அவர்களுக்குத் தெரியவில்லை. பின்னர், அவர்கள், அந்த விண்மீன், மரியாவின் கிணற்றுத் தண்ணீரில், மீண்டும் சுடர்விடுவதைக் கண்டனர். புனித பூமியிலுள்ள, ஒரு பழைய கிணறு,  மரியாவின் கிணறு என அழைக்கப்படுகிறது. இக்கிணறு பற்றி, ஒரு கதை சொல்லப்படுகின்றது, இயேசு, யோசேப்பு, மரியா ஆகியோரைக் கொண்ட திருக்குடும்பம், ஒரு சமயம், பெத்லகேமிலிருந்து எருசலேமுக்குச் சென்றது. அப்போது, அந்தக் கிணற்றருகில் அவர்கள் இளைப்பாறி, அதன் நீரைப் பருகினர் என்று சொல்லப்படுகின்றது.

ஆபத்தான கடல்பயணம் செய்வோர்க்கு, வழிகாட்டும் விடிவெள்ளி போன்று, அன்னை மரியாவும், ஆபத்தான நம் வாழ்வுப் பயணத்தில், வழிகாட்டும் விண்மீனாக விளங்குகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.