2017-01-09 16:12:00

எடுத்துக்காட்டான வாழ்வால் பிள்ளைகளுக்கு விசுவாசத்தை...


சன.09,2017. தாங்கள் பெற்றுள்ள விசுவாசம் எனும் கொடையைப் பேணிப் பாதுகாத்து, வளர்த்து, பிறருக்குச் சான்றுகளாக வாழுமாறு, பெற்றோரைக் கேட்டுக்கொண்டார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில், இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட, ஆண்டவரின் திருமுழுக்கு விழாவன்று, வத்திக்கானின் சிஸ்டீன் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி, 15 ஆண் மற்றும், 13 பெண் குழந்தைகளுக்கு, திருமுழுக்கு அருளடையாளத்தை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிகழ்வுக்குத், தங்கள் குழந்தைகளைக் கொண்டு வந்திருந்த பெற்றோர் மற்றும், ஞானப் பெற்றோரிடம் இவ்வாறு கூறினார்.

இத்திருப்பலியில், குழந்தைகள் அழ ஆரம்பித்ததால், சுருக்கமாக மறையுரை வழங்கிய திருத்தந்தை, விசுவாசம் என்பது, ஞாயிற்றுக்கிழமைகளில் விசுவாச அறிக்கையைச் சொல்வது மட்டுமல்ல, ஆனால், உண்மை மற்றும், கடவுள்மீது நம்பிக்கை வைத்து, எடுத்துக்காட்டான வாழ்வால், பிறருக்கு அதைப் போதிப்பதாகும் என்றும் கூறினார்.

நம் இதயங்களில் வளரும் ஒளி விளக்கே விசுவாசம் எனவும், இதனாலேயே, திருமுழுக்குப் பெறும்போது, ஒவ்வொருவருக்கும், ஒளியேற்றப்பட்ட மெழுகுதிரி கொடுக்கப்படுகின்றது எனவும், தொடக்ககாலத் திருஅவையில், திருமுழுக்கு, ஒளியேற்றப்படுதல் என அழைக்கப்பட்டது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

விசுவாசம் வாழ்ந்து காட்டப்படவேண்டிய ஒரு பயணம், இப்பயணம், சான்று பகரக்கூடியதாக இருக்க வேண்டும் எனவும் கூறிய திருத்தந்தை, பிள்ளைகளுக்குத் திருமுழுக்கு அளிக்கும்போது, விசுவாசத்தைக் கேட்கும் பெற்றோர், அந்த விசுவாசத்தை வாழ்ந்து, அதற்குச் சான்றாக வாழுமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும், இத்திருப்பலியில், குழந்தைகள் அழுவதைப் பார்த்த திருத்தந்தை, இயேசு நிகழ்த்திய முதல் மறையுரை, பெத்லகேம் மாட்டுத்தொழுவத்தில் இடம்பெற்ற அழுகையாகத்தான் இருந்திருக்கும், அழுகைதான் இயேசுவின் முதல் மறையுரை என்று நினைக்கின்றேன் என்று சொன்னார்.

இக்குழந்தைகள் ஏன் அழுகிறார்கள் என்பது அவர்களுக்கேத் தெரியாமல் இருக்கலாம். ஒருவேளை, இந்நாளைய நிகழ்வுக்காக, அவர்கள் விரைவிலே எழுப்பப்பட்டிருக்கலாம்,    அல்லது ஒரு குழந்தை இலேசாக அழத் தொடங்கியவுடன், அடுத்த குழந்தையும் அவ்வாறு செய்திருக்கலாம், இந்த இடம் புதிதாக இருக்கலாம் அல்லது பசியால் அழுதிருக்கலாம் என்று, அக்குழந்தைகள் அழுததற்கான காரணங்களைச் சொன்னார் திருத்தந்தை. தாய்மார், தயக்கமின்றி, குழந்தைகளின் பசியை ஆற்றுமாறும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.