2017-01-09 16:20:00

உண்மையான மறைப்பணி, ஒருபோதும் மதம் மாற்றுவதாக இருக்காது


சன.09,2017. ஆண்டவரின் திருமுழுக்கு விழாவன்று, நண்பகலில், ஞாயிறு மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையான மறைப்பணி, ஒருபோதும் மதம் மாற்றுவதாக இருக்காது, மாறாக, சான்று வாழ்வு வழியாக, கிறிஸ்துவிடம், ஈர்ப்பை ஏற்படுத்துவதாக இருக்கும் என்று கூறினார்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த இருபதாயிரத்திற்கு மேற்பட்ட விசுவாசிகளுக்கு மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை, செபத்திலும், ஆராதனையிலும், கிறிஸ்துவோடு ஆழமாக ஒன்றித்திருந்து, நம் சகோதரரில், பிரசன்னமாக இருக்கும் இயேசுவுக்கு, தெளிவான பிறரன்புச் செயல்கள் வழியாகப் பணியாற்றி, சான்று வாழ்வு வாழ்வதே உண்மையான மறைப்பணி என்றும் தெரிவித்தார்.

யோர்தான் நதிக்கரையில், தம்மிடம் திருமுழுக்குப் பெற இயேசு வந்தபோது, அவரைத் தடுத்து நிறுத்துவதற்கு, புனித திருமுழுக்கு யோவான் முயற்சித்தார், ஆனால், கடவுளுக்கும், மனிதருக்கும் இடையே நிலவிய இடைவெளியை மூடுவதற்கு விண்ணிலிருந்து மண்ணகம் வந்தார் இயேசு, எனவே, கிறிஸ்தவர்களும் தாழ்மையுள்ள பணியாளர்களாக மாற வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

இயேசு திருமுழுக்குப் பெற்றபோது, இவரே என் அன்புள்ள மகன் என்ற கடவுளின் குரல் கேட்டது, அப்போது அவர்மேல் இறங்கிய, புறா, தூய ஆவியாரின் அடையாளமாக இருக்கின்றது, ஒரு தாழ்மையான பணியாளராக, இயேசு தம் பொதுவாழ்வை, அப்போது தொடங்கினார், கிறிஸ்துவின் சீடர்கள் எல்லாரும், இயேசுவின் இம்மறைப்பணி   முறையைப் பின்பற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.