2017-01-06 14:18:00

பாசமுள்ள பார்வையில்...: இதோ, ஆண்டவரின் அடிமை


“இதோ, ஆண்டவரின் அடிமை” என்ற அன்னைமரியாவின் சொற்கள் ஆழ்ந்து சிந்திப்பதற்கு உகந்தன. அடிமை என்றால் யார்? கடமைகள் உள்ளவர், ஆனால் உரிமைகள் இல்லாதவர். ஊதியமும், முகவரியும் இல்லாதவர். தலைவரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றபடி நடக்க வேண்டியவர். கொடுப்பதை உடுத்தவேண்டும். கிடைப்பதை உண்ணவேண்டும். இதுதான் அடிமையின் நிலை. இப்படிப்பட்ட ஒரு தாழ்நிலைக்குதான் மரியா தன்னை உட்படுத்துகிறார். இத்தகைய அடிமை நிலைக்கு மரியா தன்னை கையளிக்க காரணம் என்ன?  கடவுள் மீது அவர் வைத்திருக்கிற நம்பிக்கையின் ஆழம். இங்கு அன்னை மரியா, தன்னை அடிமையாக கையளித்திருக்கலாம், ஆனால், கடவுளோ நம்மை அடிமைகளாக என்றும் கருதுவதில்லை என்பதை மனதில் கொண்டால், பல உண்மைகளுக்கு விளக்கம் கிட்டும். கடவுளாக இருந்த போதிலும், மரியாவின் மீது தனது திட்டத்தை கடவுள் திணிக்க விரும்பவில்லை, மாறாக, அவரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி, சம்மதத்தை கேட்கிறார். அன்னை மரியா விரும்பிய நிலை தெய்வீகம் அல்ல, இறைவனுக்கு பணிப் பெண்ணாய் விளங்குதலே.

அன்னை மரியாவை சிந்திக்கும் இவ்வேளையில், நம் ஒவ்வொருவரின் தாய் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். பிள்ளைகள் தன்னைப் போற்றவேண்டும், தெய்வமாக வணங்கவேண்டும் என்று நினைத்து, எதிர்பார்த்து எந்தத் தாயும் தன் பணியைச் செய்வதில்லை. பிள்ளைகளின் வெற்றிகளுக்குப் பின்னால் எங்கோ ஓரிடத்தில், ஒன்றும் அறியாதவர் போல் ஒவ்வொரு தாயும் நின்று கொண்டிருக்கிறார் என்பது, அப்பட்டமான‌ உண்மை. எந்தத் தாய், தன் குடும்பத்திற்காக தன்னை அடிமையாக கையளிக்கவில்லை? அதேவேளை, எந்தத் தாயும் அடிமையாக நடத்தப்படுவதில்லை. ஆனால், தானே விரும்பி, தன் குழந்தைகளின் நலனுக்காக, தன்னை அடிமை நிலைக்கு உட்படுத்திக் கொள்கிறார். பின் தூங்கி, முன் எழுவதிலிருந்து, அனைத்தையும் தன் குடும்பத்திற்காகவே செய்கிறார். உரிமைகளற்ற ஓர் அடிமைபோல் பணிபுரியும் அன்பு, நம் தாயன்பு. ஆனால், அனைத்து சக்திகளையும் உள்ளடக்கியது. கடவுளின் அன்புக்கு அடுத்தநிலையில் இருக்கும் தாயன்பின் வழியாகவே, கடவுள் அன்பை நாம் ஓரளவு அறிந்துகொள்ள முடிகிறது என்றால், தாயின் சக்தியைப் புரிந்துகொள்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.