2017-01-06 14:02:00

ஞானிகள், இறைவன்மீது தாகம் கொண்டுள்ள அனைவரின் உருவகம்


சன.06,2017. விண்மீனைக் கண்ட பின்னர், புதிதாகப் பிறந்திருந்த குழந்தையைத் தரிசிக்க வந்த ஞானிகள், விசுவாசமுள்ள மற்றும், இறைவன்மீது தாகம் கொண்டுள்ள அனைத்து மனிதர்களின் உருவகமாக உள்ளனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறினார்.

டிசம்பர் 06, இவ்வெள்ளியன்று, வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்ட திருக்காட்சிப் பெருவிழாவை முன்னிட்டு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கிய திருத்தந்தை, புதிதாகப் பிறந்திருந்த அரசரைப் பார்க்கவும், அவரை, வணங்கவும், ஞானிகள் வந்தனர் என்று கூறினார்.

வாழ்வில், தங்களின் இதயங்களை, இறைவனால் மயக்கப்பட அனுமதிக்கும் அனைவரின் பிரதிபலிப்பாக, இந்த ஞானிகள் இருக்கின்றனர் எனவும், தங்கள் இதயங்களில், இறைவன்மீது தூய தாகத்தை ஊற்றெடுக்கச் செய்யும் விசுவாசிகள், நற்செய்தி, கடந்த கால நிகழ்வு அல்ல, ஆனால் அது நிகழ்காலத்தில் நடப்பது என்பதை அறிந்தவர்கள் எனவும், மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

இந்தத் தூய தாகம், விசுவாச சமூகத்தில், நம்பிக்கையைத் தொடர்ந்து காத்து, ஆண்டவராகிய இயேசுவே வாரும் என, தொடர்ந்து மன்றாட வைக்கின்றது என, மறையுரையாற்றினார் திருத்தந்தை.

இதே தாகத்தில் வாழ்ந்த விவிலிய மனிதர்கள் பற்றியும் மறையுரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏரோதின் மாளிகையை ஆட்சிசெய்த முற்றிலும் மாறுபட்ட போக்கையும் விளக்கினார்.

ஏரோது, அறிவு மழுங்கி, குழப்பத்துடனும், அச்சத்துடனும் இருந்தான் என்றும், எல்லாவற்றையும், எல்லாரையும் அடக்கி ஆள நினைப்பவர்களின் இதயங்களில், கலக்கமும், குழப்பமும் இருக்கும் என்றும் உரைத்தார் திருத்தந்தை.

கொடூரமான அடக்குமுறையில் அல்ல, ஆனால், சுதந்திரமான நிலையில், நாம் அறியாத ஒன்றை, நோக்க இயலும் என்றும், அந்நிலை, நம்மை மன்னித்து குணப்படுத்தும் இறைவன் பக்கம், நம்மைத் திருப்ப இயலும் என்றும், நாம் அடிக்கடி புறக்கணிக்கும் இடங்களில், கடவுள் பிறக்க விரும்புகிறார் என்பதை உணர முடியும் என்றும், இத்திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை.

காயமடைந்தவர்கள், களைத்திருப்பவர்கள், தவறாக நடத்தப்படுபவர்கள் மற்றும், கைவிடப்பட்டவர்களுக்கு, கடவுளின் கண்களில் எப்போதும் இடம் இருக்கின்றது என்பதை, சுதந்திரமான நிலையில் உணர முடியும் என்றும் உரைத்த திருத்தந்தை, கடவுளுக்காகத் தாகம் கொண்டதை அனுபவித்த ஞானிகளால், பெத்லகேமில் பிறந்த குழந்தையை வணங்க முடிந்தது என்றும் கூறினார்.

மேலும், இவ்வாண்டில் வத்திக்கானில் கடைப்பிடிக்கப்படும் பெருவிழாக்களின் தேதிகளும் இத்திருப்பலியில் அறிவிக்கப்பட்டன. திருநீற்றுப் புதனோடு தொடங்கும் தவக்காலம் மார்ச் 01, உயிர்ப்புப் பெருவிழா ஏப்ரல் 16, ஆண்டவரின் விண்ணேற்பு மே 2, தூய ஆவியார் பெருவிழா ஜூன் 4, இயேசுவின் திருஉடல் திருஇரத்த பெருவிழா ஜூன் 15, திருவருகைக் காலம் டிசம்பர் 3 என, தேதிகள் அறிவிக்கப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.