2017-01-06 14:20:00

ஞானிகளைப் பின்பற்றி வாழ்வுப் பயணத்தைத் தொடர அழைப்பு


சன.06,2017. திருக்காட்சிப் பெருவிழாவான இவ்வெள்ளிக்கிழமை, நண்பகலில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த 35 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு, மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கீழ்த்திசை ஞானிகளைப் போன்று, நாமும், இயேசுவின் விண்மீனைத் தொடர்ந்துவரும் ஒளியை அணிந்துகொண்டு, ஆண்டவரை அன்புகூருவதற்கு, நம் பயணத்தைத் தொடங்குவோம் என்று கூறினார்.  

இயேசு அனைத்து மக்களுக்கும் ஒளியாக, தம்மை வெளிப்படுத்தியதை இன்று நாம் சிறப்பித்தோம் என்றுரைத்த திருத்தந்தை, உலகிலும், நம் ஒவ்வொருவரிலும் சுடர்விடுகின்ற இந்த ஒளி, ஞானிகளை பெத்லகேமுக்கு வழிநடத்தியது என்று கூறினார்.

நம் வாழ்வில், ஒளிர்கின்ற மற்றும், வழிநடத்துகின்ற, பல விண்மீன்கள் உள்ளன. நாம் எதைப் பின்செல்ல வேண்டுமென்பது நம்மைப் பொருத்தது என்றும், மூவேளை செப உரையில் கூறியத் திருத்தந்தை, உண்மையான ஒளி, நம் ஆண்டவரின் ஒளி, நம் ஆண்டவரே அந்த ஒளி என்றும் தெரிவித்தார்.

இந்த விண்ணக ஒளியைக் கண்டுபிடிப்பதற்கு, நாம் ஞானிகளின் எடுத்துக்காட்டைப் பின்பற்ற வேண்டுமெனவும், கிறிஸ்தவ வாழ்வு, ஒரு தொடர் பயணம் எனவும், இது நம்பிக்கையும், தேடலும் நிறைந்தது எனவும் கூறிய திருத்தந்தை, விண்மீன் மறைந்தபோதிலும், பயணத்தைத் தொடர்ந்த ஞானிகள் போன்று, நாமும் தொடர்ந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.   

மேலும், மூவேளை செப உரையின் இறுதியில், இச்சனிக்கிழமையன்று கிறிஸ்மஸ் பெருவிழாவைக் கொண்டாடும் கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளுக்கு நல்வாழ்த்தையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருக்காட்சி பெருவிழாவன்று, பாலர் சபை தினம் சிறப்பிக்கப்படுகின்றது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்துச் சிறாரும், ஊக்கமுடன், நற்செய்தியைப் பரப்புமாறு பரிந்துரைத்தார். மேலும், இரக்கத்தின் படங்கள் அடங்கிய நூல் எல்லாருக்கும் விநியோகிக்கப்படுவதும் பற்றியும் இவ்வுரையின் இறுதியில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.