2017-01-06 14:31:00

காணமுடியாத கடவுளைக் கண்டடைவதற்கு, துணிச்சலுடன் பயணம்


சன.06,2017. “நம் மத்தியில் பிறந்த, நம் கண்களால் காணமுடியாத கடவுளைக் கண்டடைவதற்கு, கீழ்த்திசை ஞானிகள் போன்று, நாமும் கவனமுடன், சோர்வின்றி, துணிச்சலுடன் பயணத்தைத் தொடர்வோம்” என்ற சொற்களை, இவ்வெள்ளியன்று, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், வத்திக்கானில், இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட திருக்காட்சி பெருவிழாவை முன்னிட்டு, மூவேளை செப உரையின் இறுதியில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, இரக்கத்தின் படங்கள் அடங்கிய நூலின் பிரதிகள் வழங்கப்பட்டன.

ஏழைகள், வீடின்றி இருப்போர், புலம்பெயர்ந்தோர், இன்னும், ஏராளமான தன்னார்வலர்கள் மற்றும், துறவிகள், ஐம்பதாயிரம் பிரதிகளை, மக்களுக்கு வழங்கினர்.

இவற்றை விநியோகித்து முடித்த பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பாக, 300க்கும் மேற்பட்டவர்களுக்கு, Sandwichம், குடிபானமும் வழங்கப்பட்டன.

இயேசுவின் இரக்கத்தை வெளிப்படுத்தும், பாவி, சக்கேயு, வரிதண்டும் மத்தேயு, நல்ல சமாரியர், நல்ல கள்வர், திருத்தூதர் பேதுரு, மேலும், இரக்கம் குறித்த ஆறு படங்கள் இப்பிரதியில் உள்ளன.

திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்கான அலுவலகம் இதனை ஏற்பாடு செய்தது. 

மேலும், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா வளாகத்தில், மனிதர்கள் மற்றும், உயிருள்ள விலங்குகளைக் கொண்டு முதன்முறையாக அமைக்கப்பட்ட குடிலை, சனவரி 06, இவ்வெள்ளியன்று பொதுமக்கள் கண்டு களித்தனர்.

கலாச்சாரம் மற்றும், சமுதாயத்தில், மிகவும் வலுவிழந்தவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட இந்த உயிருள்ள குடில், சனவரி 8, இஞ்ஞாயிறன்றும்,  மாலை 4.30 மணியிலிருந்து, 6 ஆறு மணிவரை வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Fattorietta என்ற இத்தாலிய சமூகநல அமைப்பின் உதவியுடன், சமூகத்தில் வலுவிழந்த இளையோரால் இக்குடில் அமைக்கப்பட்டது.

சிறாருக்குப் பிறந்த நாள் விழாக்களைக் கொண்டாடும் Fattorietta அமைப்பு, இந்த விழாக்கள் வழியாக, இயற்கை, விலங்குகள், தாவரங்கள் மற்றும், தங்கள் வயதையொத்த சிறாருடன், நலமான உறவுகளையும், சிறாருக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.