2017-01-06 14:55:00

உலகில் ஏறக்குறைய 15 கோடி குடியேற்றதாரத் தொழிலாளர்கள்


சன.06,2017. உலகளவில், ஏறக்குறைய 15 கோடி குடியேற்றதாரத் தொழிலாளர்கள் உள்ளனர் என்று, ஐ.நா. ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஐ.நா.வின் 2030ம் ஆண்டின், நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வளர்ச்சித்திட்ட இலக்குக்கு உதவும் நோக்கத்தில், குடியேற்றதாரத் தொழிலாளர் குறித்த ஆய்வை நடத்திய, ILO என்ற, உலக தொழில் நிறுவனம், உலகின் எல்லாப் பகுதிகளிலும், இத்தொழிலாளர் நலன் குறித்து, அக்கறை காட்டப்பட வேண்டுமென்று பரிந்துரைத்துள்ளது.

உலகளவில், 23 கோடியே 20 இலட்சம் பேர், குடியேற்றதாரர் எனவும், இவர்களில், 20 கோடியே 66 இலட்சம் பேர், 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும், வேலைசெய்யும் வயதுடைய குடியேற்றதாரரில், 72.7 விழுக்காட்டினர், அதாவது, ஏறக்குறைய 15 கோடிப் பேர், தொழிலாளர்கள் எனவும், அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

குடியேற்றதாரத் தொழிலாளர்களில், 48.4 விழுக்காட்டினர், வட அமெரிக்கா, இன்னும், வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவிலும், 35.6 விழுக்காட்டினர் அரபு நாடுகளிலும், வேலைசெய்கின்றனர் என, ILOவின் ஆய்வறிக்கை கூறுகின்றது.    

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.