2017-01-05 16:07:00

அருள்பணி டாம் விடுதலைக்கு, இந்தியாவில் செப நாள்


சன.05,2017. ஏமன் நாட்டில் கடத்தப்பட்டுள்ள அருள்பணி டாம் உழுன்னலில் அவர்களின் விடுதலைக்கென சனவரி 1ம் தேதி, புத்தாண்டு நாளன்று, கேரள தலத்திருஅவை ஒருநாள் செப வழிபாடுகளை மேற்கொண்டது என்று UCAN செய்தி கூறுகிறது.

கொச்சின் நகரில் நடைபெற்ற செப வழிபாட்டை, சீரோ மலபார் கர்தினால் ஜார்ஜ் அலஞ்சேரி அவர்கள் முன்னின்று நடத்தினார்.

மேலும், சனவரி 4, இப்புதனன்று பெங்களூரு சலேசிய குழுமங்கள், ஒரு நாள் செப முயற்சிகளை மேற்கொண்டன என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

சனவரி 4ம் தேதி, செபமும் உண்ணாநோன்பும் மேற்கொண்டு, நற்கருணை ஆராதனையும் நடத்துமாறு, பெங்களூரு சலேசியத் தலைவர், அருள்பணி Joyce Thonikuzhiyil அவர்கள் விண்ணப்பித்தார் என்று, இந்தியச் செய்திகள் கூறுகின்றன.

இதற்கிடையே, தன் விடுதலைக்கு இந்திய அரசும், திருஅவையும் கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று, அருள்பணி டாம் அவர்கள் பதிவு செய்திருந்த விண்ணப்பம், ஒரு காணொளியாக, டிசம்பர் 26ம் தேதி வெளியானது.

அருள்பணி டாம் அவர்களை விடுவிக்கக் கோரி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 10ம் தேதி, புனித பேதுரு வளாகத்தில் வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையின்போது விண்ணப்பித்தார் என்பது, குறிப்பிடத்தக்கது. 

அவரைக் கடத்திச் சென்றவர்கள் யார் என்பது தெளிவில்லாததாலும், ஏமன் நாட்டில் நிலையான ஆட்சி இல்லாததாலும், அருள்பணி டாம் அவர்களின் விடுதலையை துரிதப்படுத்த முடியவில்லை என்று, இந்திய அரசின் தரப்பில் கூறப்படுகிறது.

ஏமன் நாட்டின், ஏடன் நகரில், மார்ச் 4ம் தேதி அருள்பணி டாம் அவர்கள் கடத்தப்பட்டு, சனவரி 4ம் தேதியோடு, பத்து மாதங்கள் நிறைவடைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.