2017-01-04 15:03:00

பாசமுள்ள பார்வையில்… தாயை விட பெரிய உறவு இல்லை


சன.,05,2017. ‘‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்

நற்றவ வானினும் நனிசிறந்தனவே”

பெற்ற தாயும், பிறந்த நாடும் எல்லாவற்றையும் விட மேன்மையானது என்றார் பாரதி.

உலகத்தில் எல்லா உறவுகளையும் துறந்துவிட்ட துறவிகள் கூட துறக்க முடியாத உறவு தாயின் உறவு. ஒரு துறவியை, அவரை பெற்ற தந்தை சந்திக்க நேர்ந்தால் தந்தைதான் அந்தத் துறவியின் கால்களில் விழுந்து வணங்க வேண்டும். ஆனால் தாய் சந்திக்க நேர்ந்தால் அவள் திருவடிகளில் துறவி விழுந்து தொழவேண்டும். இதைத்தான் இந்து தர்மம் சொல்லித்தருகிறது. ஒரு நொடியில் உறவுகளை உதறித் தள்ளிய பட்டினத்து அடிகள்கூட தன் தாயின் மரணச் செய்தியறிந்து மயானம் போனார். உலகப்புகழ் பெற்றவர்களெல்லாம் தாயை நேசித்தவர்களே. அவர்களை வாஞ்சையோடு பாதுகாத்தவர்களே. மகன் நல்லவனோ, கெட்டவனோ, ஆனால், தாய் என்றைக்குமே நல்லவள்.

ஒரு பெண், மகளாக, சகோதரியாக, தாயாக, மனைவியாக, தோழியாக, பாட்டியாக... வேறுபட்ட பாத்திரங்களில் உலா வந்தாலும், இவை அனைத்திலும், தாய்மை என்பதே உன்னதம். தாயை விட பெரிய நிழல் ஏதுமில்லை. நம்மைத் தாங்கும் நிலத்தை விட தாய் பெரியவள். தாயே மனிதர்களுக்கு தெய்வங்களுள் சிறந்த தெய்வம். அம்மா என்பவள் இருக்கும்வரை எவரும் அநாதை ஆவதில்லை.

கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது:

அதிக வலி எடுத்தபோது, ‘அம்மா’ என்று கத்திய அனாதைக் குழந்தை, உண்மை உறைத்ததும், நாக்கைக் கடித்துக் கொண்டதாம்.

பிறிதொரு கவிஞர் கூறுகின்றார்:

மறு பிறவி இருந்தால் அம்மாவின் செருப்பாக பிறக்க வேண்டும்,

என் அம்மாவின் காலில் மிதிபட அல்ல;

என்னை சுமந்த அவளை, ஒரு முறை நான் சுமப்பதற்காக...

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.