2017-01-04 16:23:00

குடியேற்றத்தாரர் பிரச்சனையில், கத்தோலிக்கத் திருஅவை


சன..04,2017. மக்களின் குடியேற்றம் என்ற பிரச்சனையில், கத்தோலிக்கத் திருஅவை, நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டுள்ளது என்று, இத்தாலியக் கர்தினால்களில் ஒருவரான Gualtiero Bassetti அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romanoவில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் கூறியுள்ளார்.

"குடியேற்றத்தாரருக்கு முன், மனிதாபிமானமும், மனிதாபிமானற்ற நிலையும்" என்ற தலைப்பில், கர்தினால் Bassetti அவர்கள் எழுதியுள்ள இக்கட்டுரையில், அண்மைய காலங்களில், குடியேற்றதாரரை ஏற்றுக்கொள்ள, ஐரோப்பிய சமுதாயம் வெளியிட்டு வரும் அச்சங்களை தன் கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

புனிதத் திருத்தந்தை பத்தாம் பயஸ் அவர்கள், 1914ம் ஆண்டு நிறுவிய குடியேற்றத்தாரர் உலக நாள் வழியே, மக்களின் குடியேற்றம் என்ற பிரச்சனையில், கத்தோலிக்கத் திருஅவைக்கு அதிக அக்கறை உள்ளது என்பதை, உலகிற்குக் காட்டினார் என்று பெரூஜியா பேராயரான, கர்தினால் Bassetti அவர்கள், தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

1970ம் ஆண்டு, குடியேற்றத்தாரர் மற்றும் பயணிகளின் மேய்ப்புப்பணி திருப்பீட அவையை உருவாக்கிய அருளாளர் ஆறாம் பவுல் துவங்கி, தற்போதையத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முழு மனித முன்னேற்றம் என்ற பணிக்கென உருவாக்கியுள்ள புதிய திருப்பீட அவை முடிய, கத்தோலிக்கத் திருஅவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளை, கர்தினால் Bassetti அவர்களின் கட்டுரை விளக்கிக் கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.