2017-01-04 16:04:00

ஓராண்டை நிறைவு செய்துள்ள 'The Pope Video'


சன..04,2017. 'The Pope Video' என்ற காணொளி வழியே, திருத்தந்தையுடன் செபத்தில் இணைவோரின் எண்ணிக்கை, பல இலட்சமாக உயர்ந்துள்ளது, நிறைவைத் தருகிறது என்று, திருத்தந்தையின் செபக்கருத்துக்கள் என்ற முயற்சியை ஒருங்கிணைக்கும் இயேசு சபை அருள்பணியாளர், Frédéric Fornos அவர்கள், கூறினார்.

சனவரி 9ம் தேதி, வருகிற திங்களன்று, திருத்தந்தையின் சனவரி மாத செபக்கருத்துக்களை கூறும் காணொளி வெளியாவதையொட்டி, வத்திக்கான் வானொலிக்கு அளித்த ஒரு பேட்டியில், அருள்பணி Fornos அவர்கள் இவ்வாறு கூறினார்.

2016ம் ஆண்டு சனவரி மாதம் துவக்கப்பட்ட 'The Pope Video' என்ற காணொளி முயற்சி, ஓராண்டை நிறைவு செய்துள்ள வேளையில், இம்முயற்சியில் 1 கோடியே 30 இலட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர் என்றும், இவர்களில் பலர், Whatsapp செயலி வழியே, திருத்தந்தையின் காணொளியை இன்னும் அதிகமாகப் பகிர்ந்து வருகின்றனர் என்றும், அருள்பணி Fornos அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

YouTube, முகநூல், டுவிட்டர், Instagram ஆகிய செயலிகள் வழியே, பல்வேறு மொழிகளில் பரவிவரும் இம்முயற்சிக்கு, இளையோரின் ஆதரவு அதிகம் உள்ளது என்பது, நிறைவு தரும் விடயம் என்று, அருள்பணி Fornos அவர்கள் தன் பேட்டியில் சிறப்பாக எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.