2017-01-04 16:14:00

ஆசிய ஆன்மீகத்தின் அடிப்படை, அகிம்சை - கர்தினால் கிரேசியஸ்


சன.,04,2017. "ஆசிய ஆன்மீகத்தின் அடிப்படையாக விளங்குவது, வன்முறையற்ற அகிம்சை நிலை" என்று, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர், கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள், ஆசிய செய்தியிடம் கூறியுள்ளார்.

அகிம்சையை மையப்படுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள உலக அமைதி நாள் செய்தி குறித்து, தன் கருத்துக்களை ஆசிய செய்திக்கு அளித்துள்ள மும்பை பேராயர், கர்தினால் கிரேசியஸ் அவர்கள், அமைதியின் அடித்தளமாக சமுதாய நீதி விளங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

தன் அமைதி நாள் செய்தியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாகாத்மா காந்தி, கான் அப்துல் காபர் கான் (Khan Abdul Ghaffar Khan), அன்னை தெரேசா ஆகியோரைச் சிறப்பாகக் குறிப்பிட்டிருப்பது, ஆசியர்களுக்கு, குறிப்பாக, இந்தியர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது என்று, கர்தினால் கிரேசியஸ் அவர்கள், தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அகிம்சையின் திருத்தூதராக விளங்கிய காந்தியடிகள், மற்றும், மதம், இனம், மொழி என்ற அனைத்து பிரிவுகளையும் தாண்டி, பிறரன்பு என்ற உன்னத உண்மையை உலகறியச் செய்த, அன்னை தெரேசா ஆகியோர் வாழ்ந்த இந்தியா, இன்று, உலகமயமாதல் என்ற வழிமுறையில் தடம் மாறி, தவிப்பதையும் காண முடிகிறது என்று, கர்தினால் கிரேசியஸ் அவர்கள், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.