2017-01-03 15:18:00

"அன்பின் மகிழ்வு" திருத்தூது மடலை வாசிக்க ஆயர் வலியுறுத்தல்


சன.03,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் "அன்பின் மகிழ்வு" (Amoris Laetitia) திருத்தூது மடலை, கத்தோலிக்கக் குடும்பங்கள் வாசிக்குமாறு ஊக்கப்படுத்தியுள்ளார் ஜெர்மன் ஆயர் பேரவை அதிகாரி ஒருவர்.

கிறிஸ்மஸ் காலக் கொண்டாட்டங்களில் இருக்கும் கத்தோலிக்கக் குடும்பங்கள், திருக்குடும்பத்தை நினைவில் கொண்டு, அக்குடும்பத்தின் வாழ்வைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார், ஜெர்மன் ஆயர் பேரவையின் திருமணம் மற்றும் குடும்பப் பணிக்குழுவின் தலைவர், பெர்லின் பேராயர் Heiner Koch.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்களுக்கு ஆதரவாக, ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டியுள்ள பேராயர் Koch அவர்கள், குடும்பங்களில் பயன்படுத்தப்பட வேண்டுமென, "அன்பின் மகிழ்வு" மடலில் குறிப்பிடப்பட்டுள்ள, மூன்று சொற்களை நினைவுபடுத்தியுள்ளார்.

திருத்தந்தை குறிப்பிட்டுள்ள, நான் செய்யலாமா?, நன்றி, வருந்துகிறேன் ஆகிய மூன்று சொற்களும், குடும்பத்திற்கு அவசியமானவை என்றும் கூறியுள்ள, பேராயர் Koch அவர்கள், "அன்பின் மகிழ்வு" மடலை வாசிப்பவர் எவரும், பயனடையாமல் இருக்கமாட்டார் என, உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

திருக்குடும்ப விழாவையொட்டி, பேராயர் Koch அவர்கள், ஜெர்மனியின் ஏறக்குறைய 2 கோடியே 37 இலட்சம் கத்தோலிக்கருக்கென, வெளியிட்ட செய்தியில், இவ்வாறு கூறியுள்ளார்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.