2017-01-02 15:35:00

வாரம் ஓர் அலசல் – புத்தாண்டை புத்துணர்ச்சியுடன் வாழ...


சன.02,2017. எம் அன்புக்குரிய நேயர்களே, புதிய 2017ம் ஆண்டில், வாரம் ஓர் அலசல் நிகழ்ச்சி வழியாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த முதல் நிகழ்ச்சியில், புதிய ஆண்டை எவ்வாறு புத்துணர்ச்சியுடன் வாழலாம் என்பது பற்றி தனது எண்ணங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறார் அருள்பணி ஆரோக்ய ஜோஸ், குளித்துறை மறைமாவட்டம். இவர், உரோமையில், உர்பானியம் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், திருஅவை சட்டம் பயின்று வருகிறார்

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான். ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!” என்றான். கடவுள் உடனே, “அப்படியா? சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்”என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார். விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது. ”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது, மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதையை தூவினான். மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது. அறுவடைக் காலமும் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான். அதிர்ந்தான். உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை. ”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான். “மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான். கடவுள் புன்னகைத்தார்: “என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும். மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும். போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும். எல்லாமே வசதியாக அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது. தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார். வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி. பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும். இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது. பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது. பிரச்சனைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்? பிரச்சினை இல்லாத வாழ்க்கைதான் சபிக்கப்பட்ட வாழ்க்கை.. எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்...!!!

Who Will Cry When You Die?"    ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...*

*அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழப் போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...*

*நீ பிறந்த போது, நீ அழுதாய்...உலகம் சிரித்தது..*.

*நீ இறக்கும் போது, பலர் அழுதால்தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களைக் காண்போம்...*

* உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லித் தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லாரிடமும் கருணையுடன் இருங்கள்..*.

* உங்களுக்கு எந்த விடயத்தில் திறமை உள்ளதோ, அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விடயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.*

* அடிக்கடி கவலைப்படாதீர்கள். தேவையெனில் கவலைப்படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்துக் கவலையும் குறித்து சிந்தியுங்கள்.*

* அதிகாலையில் எழப் பழகுங்கள்*. வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.*

* தினமும் நிறைய சிரிக்கப் பழகுங்கள்.*

*அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்றுத்தரும்*

* நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.*

*எங்குச் சென்றாலும், பயணத்தின்போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.*

* உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.*

* உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த பரிசாக நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தரக்கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.*

* தனக்கு வேண்டியதைக் கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய்த் தெரிவான். தனக்கு வேண்டியதைக் கேட்காதவன் வாழ்நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்*.

* எந்த ஒரு புதுப் பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள்வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விடயங்களைத் திரும்பத் திரும்பச் செய்யுங்கள்.*

* தினமும் நல்ல இசையைக் கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.*

* புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்துகூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.*

* பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களையாவது கொண்டவனே பணக்காரன்*.

* எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாகச் செய்யுங்கள்.*

* நீங்கள் படிக்கத் துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களைக் கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்*.

* உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்துப் பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.*

* உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.*

* அலுவலகம் முடிந்து கிளம்பும்போது சில நிமிடங்கள் வீட்டிற்குச் சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.*

* நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான மனிதராயிருங்கள்.* *வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!*

*ஆணவம் ஆயுளைக் குறைக்கும்.....!(அ.பணி ஆரோக்ய ஜோஸ்)

எதிர்பாராத திருப்பங்கள்தான், நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரும். இப்புதிய ஆண்டில், புதிய வண்ணமயச் சிந்தனைகளுடன் வாழ்வோம். நாம் என்ன செய்கின்றோமோ அதுவே நமக்குத் திருப்பி வரும். எனவே, நேர்மறை எண்ணங்களுடன், நன்மைகளை நினைத்து, நன்மைகளையே ஆற்றுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.