2017-01-02 16:08:00

மக்கள்,நாடுகளுக்கு திருத்தந்தையின் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்


சன.02,2017. “இந்தப் புதிய ஆண்டின் தொடக்கத்தில், உலகின் மக்களுக்கும், நாடுகளுக்கும், எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்” என்ற சொற்களை, இத்திங்களன்று, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், பிலிப்பீன்சின் மனிலாவில், இம்மாதத்தில் நடைபெறவிருக்கும், இரக்கம் பற்றிய நான்காவது உலக திருத்தூது மாநாட்டிற்கு (WACOM IV), தனது சிறப்புப் பிரதிநிதியாக, பிரான்சின் லியோன் கர்தினால் Philippe Barbarin அவர்களை, இத்திங்களன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

2017ம் ஆண்டு சனவரி 16ம் தேதி முதல், 20ம் தேதி வரை நடைபெறவுள்ள இம்மாநாடு, இரக்கத்தில் ஒன்றிப்பு, இரக்கத்திற்காக மறைப்பணி என்ற தலைப்பில் இடம்பெறும்.

பிலிப்பீன்சின் அனைத்து கர்தினால்கள், ஆயர்கள், ஆசிய ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்கள் அனைவரும், மனிலா பேராலயத்தில் நிறைவேற்றும் திருப்பலியுடன் இந்த மாநாடு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரக்கம் பற்றிய உலக திருத்தூது மாநாடு (WACOM), கத்தோலிக்கத் திருஅவையில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது. கர்தினால் Christoph Schönborn அவர்களின் வழிநடத்துதலில், 17 கர்தினால்கள் கொண்ட குழுவினால் இந்த மாநாடு உருவாக்கப்பட்டது.

இரக்கம் பற்றிய முதல் உலக மாநாடு, உரோமையில் 2008ம் ஆண்டிலும், 2வது மாநாடு, போலந்தின் கிரக்கோவில் 2011ம் ஆண்டிலும், 3வது மாநாடு, கொலம்பியாவின் பொகோட்டாவில், 2014ம் ஆண்டிலும் நடைபெற்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.