2016-12-31 13:44:00

புத்தாண்டு சிறப்பு செய்தி – அருள்பணி. பிலிப் பென்சி SSS


எனதருமை வத்திகான் வனொலி நேயர்கள் அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும்!

2016 –ம் ஆண்டினை நன்றிகளோடு வழி அனுப்புகிற நாம், 2017-ம் புதிய ஆண்டினை கனவுகளோடும், பல்வேறு வகையான எதிர்பார்ப்புகளோடும், நம்பிக்கைகளோடும் வரவேற்கின்றோம். இந்த புதிய ஆண்டிலே, உங்கள் ஒவ்வொருவரையும் இந்த வானொலி வழியாக சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

யோவான் நற்செய்தி 16-ம் அதிகாரம், 20-வது வசனத்திலே “உங்கள் துயரங்கள் மகிழ்ச்சியாக மாறும்”என்ற இறைவனின் வார்த்தைக,ள் இந்த புதிய ஆண்டிலே நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் நனவாகாதா என்ற ஏக்கங்கள் பலருக்கு இருக்கும். அவ்வாறே இந்த புதிய ஆண்டு எப்படிபட்ட ஆசீர்வாதங்களை நம் ஒவ்வொருவருக்கும் கொண்டு வரப்போகிறது என்ற எண்ணங்களும், எதிர்பார்ப்புகளும் நமக்கு ஏராளமாக இருக்கும்.

ஆண்டுகள்:-  ஆண்டு என்று சொல்லும்போது இந்த உலகத்தில் 81 வகையான ஆண்டுகள் பெரும்பாலான மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. அவற்றில் தமிழ் புத்தாண்டும் அடக்கம். இந்த 81 ஆண்டுகளைத் தவிர கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத பல மக்களுடைய பல்வேறு வகையான ஆண்டுகளும், இந்த உலகத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றன. அவைகளை எல்லாம் கணக்கில் சேர்த்தால் ஏறத்தாழ 300 வகையான ஆண்டுகள் இந்த உலகத்தில் மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன என்று புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன. அவற்றில் இந்தியாவை சேர்ந்த 24 ஆண்டுகளும் உள்ளடக்கம்.

அப்படி பார்த்தோம் என்றால், ஏறத்தாழ ஒரு வருடத்தின் ஒவ்வொரு நாளுமே உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு தான் வருகிறது.

புத்தாண்டை வரவேற்கும் வழக்கங்கள்:-

இந்த புத்தாண்டு தினங்களை மக்கள் எவ்வாறு வரவேற்கின்றார்கள் என்பதை பார்த்தோம் என்றால், எப்படிபட்ட மனநிலையோடு இந்த புத்தாண்டிற்குள் மக்கள் நுழைகிறார்கள் என்பது புலனாகும்.

முதலாவதாக சிலர் புத்தாண்டு தினத்தில் புதிய ஆடைகளை உடுத்துகின்றார்கள். ஆடை ஒரு மனிதனின் ஆளுமையையும், அவன் மனதினையும் பிரதிபலிக்கின்றது. புதிய ஆடை உடுத்துகின்ற வேளையில் அந்த மனிதன் புதிய ஆளுமையையும், புதிய மனதினையும் கொண்டிருக்கிறான் என்பதை பிரதிபலிக்கின்றது. 

இரண்டாவதாக புத்தாண்டு தினத்திலே ஒரு சிலர், மாமிசங்களை சாப்பிடும்போது, ஒரு சில விலங்குகளின் மாமிசங்களை உண்ணுவதில்லை. உதாரணமாக  நண்டு, இறால் போன்ற பக்கவாட்டிலும் நடக்கக் கூடிய செல்லக் கூடிய உயிரினங்களை சாப்பிடுவதில்லை. காரணம், புத்தாண்டில் நாம் முன்னோக்கித்தான் செல்ல வேண்டும் என்ற ஓர் எண்ணத்தில், இந்த மாமிசங்களைச் சாப்பிடுவதில்லை.

மூன்றாவதாக, புத்தாண்டில் சமாதானத்தையும் அன்பினையும் பிறரோடு பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு வழக்கத்தை தங்களுடைய கலாச்சாரத்திற்கு ஏற்ப வார்த்தைகளாலும், கைகளைக் குலுக்கிக் கொள்வதன் வழியாகவும், ஆரத்தழுவுதல்கள் வழியாகவும், முத்தங்களைப் பரிமாற்றிக் கொள்ளுதல் வழியாகவும், சமாதானத்தையும், அன்பையும் ஒருவர் ஒருவரோடு பகிர்ந்து கொள்கிறார்கள். ஆக இந்த புத்தாண்டில் ஒவ்வொருவரும், சாமாதானமாகவும், அன்பாகவும் இருக்கவேண்டும் என்ற ஒரு நோக்கத்தில்.

நான்காவதாக ஒரு சிலர், புத்தாண்டு தினத்திலே வேப்பம் இலையையும், சிறு வெல்லக் கட்டியையும் இணைத்து உண்கிறார்கள். காரணம், இந்த ஆண்டில் வரக்கூடிய இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, புகழ்ச்சி, இகழ்ச்சி அனைத்தையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலையில் நான் இருக்கிறேன் என்பதை காட்டக் கூடிய வகையிலும், இந்த ஆண்டு தரக்கூடிய ஏற்ற இறக்கங்கள் எல்லாவற்றையும் நான் ஏற்றுக் கொள்ளுவேன் என்பதை காட்டுவதாகவும் இந்த உணவு முறை இருக்கிறது.

ஐந்தாவதாக ஒரு சிலர், வானவேடிக்கைகள் வழியாக, இந்த ஆண்டினை வரவேற்கின்றார்கள். வான வேடிக்கைகள் ஒரு ஒளியையும், ஒரு மகிழ்ச்சியையும் தருகிறது. ஆக இந்த ஆண்டு என்னுடைய வாழ்க்கையில் ஒளியையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியதாக அமையும் என்ற ஒரு எண்ணத்தில் இந்த ஆண்டினை வரவேற்கிறார்கள்.

மனநிலைகள்:-

ஆக, புத்தாண்டு எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் வருகிறது. ஆனால் நான் எப்படிபட்ட மனநிலையில் இந்த புத்தாண்டில் நுழைகிறேன் என்பதைப் பொருத்தே, இந்த புத்தாண்டில் நான் எதைப் பெறப்போகிறேன் என்பது தீர்மானிக்கப்படுகின்றது. ஆக, எத்தகைய மனநிலையில் நாம் இந்த புத்தாண்டில் நுழைகிறோம்? மூன்று வகையான மனநிலையில் நாம் இந்த புத்தாண்டிற்குள் நுழையலாம்.

முதலாவது மனநிலை... positive attitude… நேர்மறையான மனநிலை. லூக்காஸ் நற்செய்தி 13வது அதிகாரம், 6-லிருந்து 8 வரையிலான இறைவார்த்தைகளை வாசித்தோமென்றால், ஆண்டவர் இயேசு அத்திமர உவமையை சொல்வார். தோட்டகாரன் ஒருவன் தனது தோட்டத்தில் அத்தி மரத்தை நட்டு வளர்த்தபொழுது, மூன்று ஆண்டுகள் ஆனபிறகும் கனி தராததினால், தொழிலாளியிடம் சொல்கிறான் அந்த மரத்தை வெட்டி எடுத்து விடுமாறு. ஆனால் தொழிலாளியோ... இன்னும் ஒரு ஆண்டு காத்திருப்போம், இந்த ஆண்டில் அவற்றை நான் கொத்தி எரு போடுகிறேன்... என்று கூறுகிறான். ஆக, இன்னும் ஒரு வாய்ப்பு அந்த அத்தி மரத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த புத்தாண்டினையும் ஒரு சிலர், தங்களுக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பாக இதை பார்க்கிறார்கள். மகிழ்ச்சியோடு, நம்பிக்கையோடு இந்த ஆண்டிற்குள் நுழைகிறார்கள்.

இரண்டாவது மனநிலை... negative attitude… எதிர்மறையான மனநிலை. மத்தேயு நற்செய்தி 8-ம் அதிகாரம் 23 –லிருந்து 28 வரையிலான இறைவசனங்களில், படகில் ஆண்டவர் உறங்கி கொண்டிருக்கும் போது, உடனிருந்த சீடர்கள் கடல் சீற்றத்தைக் கண்டு, அஞ்சுகிறார்கள்….. பயப்படுகிறார்கள். இறைவனின் பிரசன்னம் தங்களோடு இருந்தும் கூட, அந்த பயம் அவர்களை ஆட்கொண்டு விடுகிறது. அதே மாதிரி தான் ஒரு சிலர், இந்த புத்தாண்டிற்குள் கவலைகளோடும், பயங்களோடும், விரக்திகளோடும் உள்ளே நுழைகின்றனர்.

மூன்றாவது மனநிலை..... Just like that attitude… பரவாயில்லை... எதுனாலும் ஓகே... என்ற ஒரு attitude. இவர்களுக்கு எல்லா நாட்களும் ஒரே மாதிரியான நாட்கள் தான். புத்தாண்டும் வாழ்க்கையில் மற்றும் ஒரு நாளாகவே கழிந்துவிடும்.

நாம் எத்தகைய மனநிலையோடு இந்த ஆண்டிற்குள் அடி எடுத்து வைக்கிறோம்?

இறைவனின் தாய் அன்னை மரியாள்:-

இன்றைய தினத்தை திருச்சபை, இறைவனின் தாய் அன்னை மரியாள் என்ற திருவிழாவினையும் கொண்டாடுகிறது. இந்த திருவிழாவை பல்வேறு இடங்களில், பல்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு கொண்டு வந்திருந்தாலும், 1969-ம் ஆண்டிலிருந்து தான் இந்த திருவிழாவானது ஜனவரி மாதம் 1-ம் தேதியாக உலகம் முழுவதிலும் திருச்சபை கொண்டாடுகின்றது. ஆக,  புத்தாண்டின் முதல் தினத்தில் அன்னை மரியாளைக் கொண்டாடுகின்ற நாம், அன்னை மரியாளின் எடுத்துக்காட்டினையும் நம்முடைய வாழ்க்கையில், இந்த புத்தாண்டில், எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும் என்று திருச்சபை நமக்கு அறிவுறுத்துகிறது. அன்னை மரியாள் இறைவனுடைய பார்வையில் தகுதியானவளாக இருந்தாள். அதனால்தான் இறைவன் தன்னுடைய மீட்புத் திட்டத்திற்கு அவளைத் தேர்ந்தெடுக்கிறார். அவளும் அருள் நிறை பெற்றவளாகவும், ஆசீர்வதிக்க பெற்றவளாகவும், பேறுபெற்றவளாகவும் இந்த உலகத்திற்கு இறைவனால் தரப்படுகிறாள்.

ஆக, யார் யாரெல்லாம் இறைவனுடைய பார்வையில் தகுதியானவர்களாக இருக்கிறார்களோ...அவர்கள் ஒவ்வொருவரையும் ஆண்டவர் அருள் நிறை பெற்றவர்களாக, ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக, பேறுடையவர்களாக மாற்றுவார். ஆக, இந்த ஆண்டில் நானும் இறைவனுடைய பார்வையில் தகுதியானவனாக மாறினேன் என்றால், என்னுடைய வாழ்க்கையிலும் அருளும், பேறும், ஆசீர்வாதமும் அதிகமாக இருக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.

தகுதியானவர்களாகிட :-

ஆண்டவருடைய பார்வையில் தகுதியானவர்களாக நாம் மாற என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எழும் பொழுது, என்னுடைய மனதில் வரக் கூடிய ஒரு உவமையை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். பிரேஸில் நாட்டை சார்ந்த பவுலோ கொயலோ என்ற புகழ்பெற்ற எழுத்தாளர், Like the Flowing River என்ற தனது புத்தகத்தில் பென்சில் பற்றிய ஒரு உவமையை சொல்லி இருப்பார். ஒரு பாட்டி தனது பேரக்குழந்தையிடம் “ஒரு பென்சிலை போல நீ இருக்க வேண்டும்” என்று சொல்லும் பொழுது, “அந்த பென்சிலில்அப்படி என்ன இருக்கிறது?” என்று அந்த சிறுவன் கேட்ட பொழுது, அந்த பாட்டியானவள் சொல்லுவாள் “ முதலில் இந்த பென்சில் தன்னை முழுவதுமாக எழுதுபவருடைய கைகளில் தருகின்றது... அர்ப்பணிக்கின்றது” என்று கூறுவாள். “அது மாதிரியே... மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவருமே நம்மை முழுவதுமாக இறைவனுடைய பாதத்தில் அர்ப்பணிக்க வேண்டும்.

இரண்டாவதாக, பென்சிலானது அவ்வப்போது தேவைப்படும் போதெல்லாம் தன்னைத்தானே செதுக்கிக் கொள்ளுகிறது.... கூர்தீட்டி கொள்கிறது. மனிதர்களாகிய நாமும் தேவைப்படும் போதெல்லாம், நம்மை நாமே கூர்தீட்டிக்கொள்ள வேண்டும்…… தயாரித்துக் கொள்ளவேண்டும். உடலளவில்….. மனதளவில்..... ஆன்மீக அளவில்... என ஒரு தயாரிப்பில் எப்போதும் இருக்க வேண்டும். 

மூன்றாவது.... பென்சில் தவறு செய்யும்போதெல்லாம் ரப்பரால் அழிக்கப்பட்டு, தன்னை திருத்திக் கொள்கிறது. தவறுகளை சுட்டிக் காட்டும்பொழுது திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக அவற்றைப் பார்க்க வேண்டும் என்ற ஒரு படிப்பினையை இந்த பென்சில் நமக்கு தருகிறது.

நான்காவதாக வெளிப்புறம் இருக்கக் கூடிய மரத்துண்டு அல்ல.... மாறாக.. உட்புறம் இருக்கக் கூடிய கரும் துகள்களே பென்சிலின் தரத்தினை நிர்ணயிக்கின்றது. ஆம். வெளி அடையாளங்களான பணம், பதவி, படிப்பு, புகழ் இவைகள் நமது உண்மையான அடையாளங்கள் அல்ல! இறைவனின் சாயலாக நாம் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பது தான் நமது உண்மையான அடையாளம்.

ஐந்தாவதாக.... இறுதியாக பென்சில் தன்னை கொடுத்து.... தன்னை இழந்து, ஒரு அடையாளத்தை..... ஒரு சுவட்டை விட்டுச் செல்கின்றது. பெறுவதில் அல்ல.... கொடுப்பதில் தான் வாழ்க்கையின் அர்த்தம் இருக்கிறது என்பதை உணர்ந்து நம்முடைய திறமைகளை, சக்தியை, நேரத்தை பிறருக்காக, உலகுக்காக கொடுக்கும் பொழுது, நாமும் நாம் வாழ்ந்ததற்கான ஒரு அடையாளத்தை, சுவட்டினை இந்த உலகத்தில் விட்டுச் செல்கின்றோம்.

இப்படி இந்த பென்சிலை போல நமது வாழ்க்கை அமைந்தது என்றால், இறைவனுடைய பார்வையில் தகுதியான மனிதர்களாக நாம் ஒவ்வொருவரும் வாழ ஆரம்பிப்போம். இப்படி தகுதியான மனிதர்களாக நாம் வாழும் பொழுது, இறைவனுடைய ஆசீர்வாதமும், அருளும், பேறும் நமக்கு நிறைய கிடைக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

ஆசீராக :-

ஆக, இந்த ஆண்டில் நமது எண்ணங்கள், நமது சொற்கள், நமது செயல்கள், நமது வாழ்வுமுறை இறைவனுக்கு தகுதியானவைகளாக மாறிட... இந்த தகுதியினால் இறைவனுடைய ஆசீரும், அருளும், நம் ஒவ்வொருவருக்கும் நல்ல உடல்ஆரோக்கியம், நிறைவான மகிழ்ச்சி, உழைப்புக்கேற்ற ஊதியம், மன அமைதி, நிபந்தனையற்ற அன்பு, உண்மையான உறவுகள், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைத்திட.... உங்கள் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கிறோம்..... வாழ்த்துகிறோம்.... அனைவருக்கும் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்!!!!

நன்றி.........

அருட்பணி. பிலிப் பென்சி SSS

பொருளாளர்; நற்கருணை சபை

உரோம்

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.