2016-12-31 13:56:00

பாசமுள்ள பார்வையில்... அன்னைக்கொரு அன்பு மடல்


பாசமுள்ள பார்வையில்...

2017ம் ஆண்டு புலர்ந்துள்ளது. இந்த ஆண்டைக் குறித்து எண்ணிய வேளையில், மனதில் முதலில் தோன்றியது, மரியன்னை. ஆம், பாத்திமா நகரில் அன்னை மரியா காட்சி கொடுத்த முதல் நூற்றாண்டு, வருகிற மே மாதம் சிறப்பிக்கப்படவுள்ளது. இந்த அற்புத நிகழ்வைக் கொண்டாட, இவ்வாண்டு மே மாதம் 12, 13 தேதிகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர்த்துக்கல் நாட்டில் உள்ள புகழ்பெற்ற பாத்திமா அன்னை திருத்தலத்திற்குச் செல்கிறார்.

இந்த வரலாற்று நினைவையொட்டி, வத்திக்கான் வானொலியில், முதல் நிமிட நிகழ்ச்சி, அன்னை மரியாவுக்கும், பொதுவாக, அன்னையருக்கும் அர்ப்பணமாக்கப்பட்டுள்ளது.

"பாசமுள்ள பார்வையில்..." என்ற பெயரில் துவங்கும் இந்த முதல் நிமிட நிகழ்ச்சி, ஒரு சேயின், மகவின் பார்வையிலிருந்து, அன்னையை, குறிப்பாக, மரியன்னையைப் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள வருகிறது.

கடந்த ஆண்டுகளில், வத்திக்கான் வானொலி நிகழ்ச்சியின் முதல் நிமிடம், வரலாற்றில் இன்று, நாளுமொரு நல்லெண்ணம், கவிதைக் கனவுகள், வாழ்ந்தவர் வழியில், கற்றனைத்தூறும், புனிதரும் மனிதரே, கடுகு சிறுத்தாலும், இது இரக்கத்தின் காலம்... என்ற பல வடிவங்களில் உங்களை வந்தடைந்தது. இந்த வரிசையில், இன்று முதல், உங்களை வந்தடைவது...

பாசமுள்ள பார்வையில்...

அன்னைக்கொரு அன்பு மடல்

எங்கள் அன்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய மரியன்னையே,

நாங்கள் துவக்கியிருக்கும் 2017ம் ஆண்டில் நீர் எம்மோடு வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறோம். ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு நாளன்று ‘இறைவனின் தாய்’ என்ற பட்டம் சூட்டி, உங்களுக்கு விழா எடுக்கிறோம். ஆனால், இறைவனின் தாயானதை உம்மால் கொண்டாட முடிந்ததா என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது...

நீர் இறைவனின் தாயானதை எண்ணி, நன்றி கூறி, பெருமைபட்டு, கற்களால் எழுப்பிய கோவில்களில் பீடமேற்றி உம்மை நாங்கள் இன்று வணங்குகிறோம். நீர் வாழ்ந்த காலத்தில், திருமணம் ஆகாமல் இறைவனின் தாயானதற்காக, உமக்கு, கற்களால், கோவில் அல்ல... சமாதி எழுப்பியிருப்பார்கள் என்பதையும் உணர்கிறோம். கண்ணால் காணமுடியாத இறைவனை உள்ளத்தால் கண்டு, அவரை மட்டுமே நம்பி, உம் கருவறைக்குள் அவருக்குக் கோவில் கட்ட நீர் சம்மதித்ததால், உம் பெயரில் நாங்கள் இன்று கோவில்கள் கட்டுகிறோம்.

கடந்த இருபது நூற்றாண்டுகள் உலகில் பிறந்த, இனியும் பிறக்கப் போகும் ஒவ்வொரு மனித உயிரும் உம்மை ஏதோ ஒரு வகையில் சந்தித்துள்ளனர், இனியும் சந்திப்பார்கள் என்பதை நாங்கள் உறுதியாகச் சொல்லலாம். அத்தனை புகழ் பெற்றவர் நீர். உலகில் வரலாறு படைத்துள்ள பல கோடி பெண்கள் மத்தியில், நீர் உண்மையில் பேறு பெற்றவர்.

"கறைபட்ட எமது குலத்தின் தனிப்பெரும் பெருமை நீர்" என்று ஆங்கிலக் கவிஞர் William Wordsworth உம்மைப்பற்றிச் சொன்னது உமது புகழ்கடலில் ஒரு துளிதான். உமது புகழ்கடலில் நாங்களும் மூழ்கி மகிழ்கிறோம், பெருமைப் படுகிறோம்.

வாழ்க மரியே! வாழ்க எம் அன்னையே!

இப்படிக்கு,

உமது குழந்தைகளாய் பிறக்க கொடுத்து வைத்தவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.