2016-12-30 15:32:00

வத்திக்கான் பசிலிக்காவில் அற்புதங்களின் அன்னைமரியா


டிச.30,2016. தூய அல்போன்சுஸ் ராட்டிஸ்போன் (Alphonsus Ratisbonne) அவர்கள் மனம் மாறியதற்குக் காரணமாக அமைந்த, அற்புதங்களின் அன்னைமரியா திருவுருவம், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தூய அல்போன்சுஸ் ராட்டிஸ்போன் அவர்கள், மனம் மாறியதன் 175ம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் விதமாக, இந்த அன்னை மரியா திருவுருவத்தை, திருப்பயணிகள், இப்புதன் பொது மறைக்கல்வி போதகத்திற்குக் கொண்டுவந்து, திருத்தந்தையின் ஆசிரையும் பெற்றனர்.

உரோம் நகரின் புனித Andrea delle Fratte ஆலயத்திலுள்ள ஒரு சிற்றாலயத்தில், 175 ஆண்டுகளுக்கு முன்னர், 1842ம் ஆண்டில், ராட்டிஸ்போன் அவர்களுக்கு அன்னை மரியா காட்சி கொடுத்தார்.

யூதரும், வங்கியில் பணியாற்றியவருமான ராட்டிஸ்போன் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவை மற்றும் கத்தோலிக்க குருகுலத்தார் மீது வெறுப்புக் கொண்டிருந்தவர். அன்னை மரியாவை, காட்சியில் கண்ட பின்னர், மனம் மாறிய இவர், 1847ம் ஆண்டில், இயேசு சபையில், அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

1884ம் ஆண்டில் இறைபதம் அடைந்த இத்தூயவரின் மனமாற்றம், அக்காலத்தில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனச் சொல்லப்படுகிறது.

அற்புதங்களின் அன்னைமரியா திருவுருவம், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் சனவரி 1, இஞ்ஞாயிறுவரை வைக்கப்படும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.