2016-12-30 15:21:00

புலம்பெயரும் மக்களுக்கு திருஅவையின் பணி


டிச.30,2016. மக்கள் கட்டாயமாக புலம்பெயர்தலும், குடிபெயர்தலும், இன்றைய சமுதாயத்தின் ஒரு பக்கத்தில், திறந்த காயமாக உள்ளன, இது தொடர்ந்து விரிந்துகொண்டே செல்கின்றது என்று, திருப்பீட குடியேற்றதாரர் அவைத் தலைவர் கர்தினால் அந்தோனியோ மரிய வேலியோ அவர்கள் கூறியுள்ளார்.

இதனாலே, திருஅவை, இம்மக்களுக்கு ஆற்றும் பணிகளைத் தீவிரப்படுத்தி, இம்மக்கள் வாழ்வதற்கான உரிமை, அமைதி, பாதுகாப்பு மற்றும் உதவிகளுக்குத் தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றது எனத் தெரிவித்தார், கர்தினால் வேலியோ.

திருஅவையில், புலம்பெயரும் மக்களுக்கு ஆற்றப்படும் பணிகள் குறித்து, திருப்பீடத்தின் லொசர்வாத்தோரே ரொமானோ தினத்தாளில் கட்டுரை எழுதியுள்ள கர்தினால் வேலியோ அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

வருகிற சனவரி முதல் தேதியிலிருந்து, இத்திருப்பீட அவை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம் என்ற புதிய துறையில் இணைந்து, இயங்கவிருப்பது பற்றியும் குறிப்பிட்டுள்ள கர்தினால் வேலியோ அவர்கள், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், புலம்பெயரும் மக்களுக்கு, திருஅவை ஆற்றிவரும் எல்லா உதவிகளையும் விவரித்துள்ளார்.

புலம்பெயரும் மற்றும், குடிபெயரும் மக்களை ஏற்பதற்கு அஞ்ச வேண்டாம் எனவும், இவர்களை ஏற்பதற்கு, உலகளாவிய ஒருமைப்பாடு அவசியம் எனவும் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்தை, புதிய ஆண்டில் நிறைவேற்றுவோம்  என எழுதியுள்ளார், கர்தினால் வேலியோ.

இதற்கிடையே, பாகிஸ்தானிலுள்ள பதினைந்து இலட்சம் ஆப்கான் அகதிகளை வெளியேற்றுவதற்கு அந்நாடு தீர்மானித்துள்ளது என்று, ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இந்த அகதிகளில் பலர், தங்களின் ஒட்டுமொத்த வாழ்வையும், பாகிஸ்தானிலே வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.