2016-12-30 15:27:00

சிரியா நிலைமை பற்றி கர்தினால் செனாரி


டிச.30,2016. சிரியாவிலுள்ள கிறிஸ்தவர்கள், உரையாடல் மற்றும் தொடர்புகளின் காணக்கூடிய அடையாளங்களாக இருக்கின்றவேளை, இந்த அடையாளங்கள் மறையும்போது, மத்தியக் கிழக்குப் பகுதி முழுவதன், சமூக மற்றும் சமயக் கூறுகள் துன்புறுகின்றன என்று, சிரியா திருப்பீடத் தூதர் கர்தினால் மாரியோ செனாரி அவர்கள் தெரிவித்தார்.

சிரியாவின் நிலைமை குறித்து, லொசர்வாத்தோரே ரொமானோ தினத்தாளுக்குப் பேட்டியளித்த, கர்தினால் செனாரி அவர்கள், போர் இடம்பெறும் ஒரு நாட்டில், திருப்பீடத் தூதராக இருப்பதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.

சிரியாவை விட்டு கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, மற்ற மக்களும் வெளியேறுவதை நிறுத்துவதற்குத் தீர்வு உள்ளது எனக் கூறிய கர்தினால் செனாரி அவர்கள், இதற்கு, வன்முறை நிறுத்தப்பட்டு, மனிதாபிமானக் கதவுகள் திறக்கப்பட வழியமைக்கப்பட வேண்டும் எனவும், அரசியல் ஒப்பந்தம் இடம்பெற வேண்டும் எனவும் கூறினார் . 

இதற்கிடையே, சிரியா அரசுக்கும், புரட்சியாளர்களுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ளது என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இது தொடர்பாக இவ்வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் இரஷ்ய அரசுத்தலைவர் புதின் அவர்கள் பேசும்போது, சிரியா அரசுக்கும், புரட்சிப் படைகளுக்கும் இடையே, டிசம்பர் 29-30 நள்ளிரவில், போர் நிறுத்தம் உட்பட, பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம், இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று, சிரியாவில் அமைதி உண்டாக வழி வகுக்கும். இதன் பிறகு சிரியாவில், இரஷ்ய படைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று கூறினார்.

சிரியாவில், ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும், சுன்னி பிரிவைச் சேர்ந்த புரட்சிப் படைகளுக்கும் இடையே ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக, உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது.

ஆதாரம் : Agencies/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.