2016-12-29 15:21:00

ஒவ்வோர் ஆண்டும், இருளையும் ஒளியையும் கொணர்கின்றது


டிச.29,2016. உண்மையான கிறிஸ்மஸ் மகிழ்வு, புனித வெள்ளி வழியே உயிர்ப்பில் நிறைவடைகிறது என்று அமெரிக்க ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் டேனியல் தினார்தோ அவர்கள் தன் கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார்.

கர்தினால் தினார்தோ அவர்களின் வலைத்தளத்தில் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்ட இச்செய்தி, இஸ்பெயின் நாட்டின் பாஸ்க் பகுதியில் பாடப்படும் ஒரு கிறிஸ்துபிறப்பு விழா பாடலின் வரிகளுடன் துவங்குகிறது.

தாலாட்டுப் பாடலாக எழுதப்பட்டுள்ள இப்பாடலில், கல்வாரி நிகழ்வுகளும், உயிர்ப்பு நிகழ்வுகளும் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் தினார்தோ அவர்கள், கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, வெறும் உணர்வுப்பூர்வமான விழாவாக மாறாமல் இருக்க, பல கிறிஸ்துமஸ் பாடல்கள், இயேசுவின் பாடுகள், உயிர்ப்புடன் நம்மை இணைக்கின்றன என்று தன் செய்தியில் கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும், தன் பங்கிற்கு, இருளையும் ஒளியையும் கொணர்கின்றது என்று தன் செய்தியில் கூறும் கர்தினால் தினார்தோ அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு தேர்தலும், உலகெங்கும் அதிகரித்துள்ள புலம்பெயர்ந்தோர் பிரச்சனையும் நாம் இவ்வாண்டில் சந்தித்த இருள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இருளில் தவிக்கும் மக்களுடன் தன்னையே இணைத்துக்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் எளிய வாழ்வின் வழியே, துன்புறும் மக்களுடன் நம்மை இணைத்துக்கொள்ள அழைப்பு விடுக்கிறார் என்பதை, கர்தினால் தினார்தோ அவர்கள், தன் செய்தியில் சிறப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.