2016-12-28 15:07:00

இரக்கத்தின் தூதர்கள் : இரக்கச் செயல்களை ஆற்றியவர்


டிச.28,2016. முறைகேடான செல்வங்களில் நம்பிக்கை வைக்காதே. பேரிடரின் நாளில் அவற்றால் உனக்குப் பயன் இராது... கருமிகள், மற்றவர்களுக்கு உணவை அளந்தே கொடுப்பார்கள், அவர்களின் உணவறையில் எதுவும் இராது... தேவைக்குமேல் உன்னிடம் உள்ளதையெல்லாம் தருமம் செய்துவிடு.. என்று, திருவிவிலியம் கூறுகிறது. இத்தகைய விவிலியப் போதனையின்படி வாழ்ந்தவர் செசாரியாவின் புனித பசிலியார். புனித பெரிய பசிலியார் என்றழைக்கப்படும் இவர், திருவிவிலியம் அறிவுறுத்தும் இரக்கச் செயல்களைச் செய்தவர். இவர் சொல்கிறார்...

உன் வீட்டில், உனது தேவைக்குமேல் எஞ்சியிருக்கும் உணவுப் பொருள்கள் ஏழைகளுக்கே உரியவை. உனது அலமாரியில், நீ அடுக்கி வைத்திருக்கும் ஆடைகள், உனது தேவைக்கு மிஞ்சினால், அவை, தங்களை மூடிக்கொள்ள எந்தத் துணியும் இன்றித் தவிக்கும் ஏழைகளுக்கே உரியவை. நீ வைத்திருக்கும், உனது தேவைக்கு அதிகமான காலணிகள், வெறுங்காலோடு செல்லும் ஏழைகளுக்கே உரியவை. உன் இரும்புப் பெட்டியில் நீ சேர்த்து வைத்திருக்கும் செல்வமும், ஏழைகளுக்கே உரியது. இரக்கச் செயல்களை நீ செய்யாது விட்டுவிடும்போது, அத்தனை முறையும், நீ, அறநெறி சார்ந்த தவறு செய்கிறாய்..

புனித பெரிய பசிலியார், தான் வாழ்ந்ததைப் போதித்தவர். தான் சொன்னதைச் செய்து காட்டியவர். கி.பி.329 அல்லது கி.பி.330ம் ஆண்டில், தற்போதைய துருக்கி நாட்டில், கப்பதோசியாவின் செசாரியாவில், பக்தியுள்ள செல்வந்தக் குடும்பத்தில் இவர் பிறந்தார். இவரது தாய்வழி தாத்தா, விசுவாசத்திற்காகக் கொலைசெய்யப்பட்ட மறைசாட்சி. பசிலியாரின் குடும்பத்தில் பிறந்த பத்து சகோதர, சகோதரிகளில் பலர் புனிதர்கள். பசிலியார், கப்பதோசியாவில், படித்துக்கொண்டிருந்தபோது, கிரகரி நாசியான்சுஸ் அவர்களைச் சந்தித்தார். இவரே, புனித பெரிய பசிலியார்க்கு, வாழ்நாள் முழுவதும் உற்ற நண்பராக விளங்கியவர். உயர்கல்விக்காக, இவர்கள் இருவரும், கான்ஸ்டாண்டிநோபிள் சென்றனர். பின்னர், ஏத்தென்ஸ் நகரில் இவ்விருவரும், மெய்யியல் கற்றுக்கொண்டிருந்தபோது, வகுப்புத் தோழர் ஜூலியன் அவர்களைச் சந்தித்தனர். ஜூலியன் பிற்காலத்தில், பேரரசராக உயர்ந்தார். கி.பி.356ம் ஆண்டில், ஏத்தென்ஸ் நகரிலிருந்து, எகிப்து, சிரியா சென்று, பின்னர் செசாரியா திரும்பினார் பசிலியார். சட்டம் படித்த இவர், அங்கு, வழக்கறிஞராகவும் பயிற்சி செய்தார். ஆன்மீக ஆர்வம்கொண்ட ஆயர் செபஸ்தே யூஸ்தாத்தியுஸ் அவர்களையும், செசாரியாவில் சந்தித்தார். இச்சந்திப்புக்குப் பின்னர், பசிலியார் அவர்களின் வாழ்வு முற்றிலும் மாறியது. தனது வாழ்வை இறைவனுக்காக அர்ப்பணித்தார். இவர் தனது ஆன்மீக விழிப்புணர்வு பற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார்.

“நான் எனது இளமை காலம் முழுவதையும், தேவையற்ற கேளிக்கைகளில் வீணாக்கி விட்டேன். ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுந்ததுபோல் உணர்கிறேன். வியத்தகு, மிகச் சிறப்பான நற்செய்தி உண்மையின் ஒளியின்முன், இவ்வுலகின் மெய்ஞான அறிவுகள், ஒன்றுமில்லை என்பதை அறிகிறேன்…”

பசிலியார் அவர்கள், திருமுழுக்குப் பெற்ற பின்னர், பாலஸ்தீனம், எகிப்து, சிரியா, மெசபத்தோமியா ஆகிய பகுதிகளுக்குச் சென்று, கடும் தவ வாழ்வு மற்றும், ஆதீன வாழ்வு பற்றிக் கற்றார். பின்னர் செசாரியா திரும்பி, ஆதீன தவ வாழ்வு வாழ்ந்தார். தனது செல்வங்களை ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தார். பலரும் இவரைப் பின்தொடரவே, தனியாக, தவ வாழ்வு வாழ்வதை விடுத்து, குழுவாக வாழும் துறவு வாழ்வில் பற்றுகொண்டார். தனது சகோதரர் பேதுரு மற்றும் சிலருடன் சேர்ந்து, 358ம் ஆண்டில், அனெஸ்ஸிக்கு அருகில், தனது குடும்ப எஸ்டேட்டில், ஒரு துறவு மடத்தை ஆரம்பித்தார். துறவற குழு வாழ்வுக்கு கொள்கைகளை எழுதினார். கி.பி.370 ஆண்டில், செசாரியா நகரின் பேராயர் யுசேபியுஸ் இறக்கவே, செசாரியாவின் புதிய ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார் பசிலியார். 379ம் ஆண்டில் இவர் இறக்கும்வரை, அறிவிலும், ஆற்றலிலும், பிறரன்புப் பணிகளிலும் மிகச் சிறந்து விளங்கினார். இதனாலே, இவர் பெரிய பசிலியார் என அழைக்கப்படுகிறார்.

உற்ற நண்பர்களான, புனிதர்கள் பெரிய பசிலியார், கிரகரி நாசியான்சுஸ் ஆகிய இருவரும், கப்பதோசியாவைச் சேர்ந்த ஆயர்களாகவும், மறைவல்லுனர்களாகவும் அழைக்கப்படுகின்றனர். கிழக்கத்திய திருஅவையில் மறைபோதகர்களாகிய இவ்விருவரும், மூவொரு இறைவன் பற்றியும், இயேசு மனிதராகப் பிறந்தது பற்றியும் தெளிவான கருத்துக்களைத் திருஅவைக்குக் கற்றுத் தந்தனர். புனித பெரிய பசிலியார், பைசான்டைன் கீழை வழிபாட்டுமுறையில் பரவிய, ஆரியப் பதிதத் தவறான கொள்கைகளைக் கடுமையாகச் சாடி, அதில் வெற்றியும் கண்டார். இப்புனிதர், தலைசிறந்த அறிஞராக இருந்தாலும், மனத்தாராளமும், கருணையும் மிக்கவர். நாட்டில், கடும் வறட்சியினால் ஏற்பட்ட பஞ்சத்தின்போது, தானே உணவகங்களை ஆரம்பித்து, ஏழைகளுக்கு உணவு வழங்கினார். செசாரியாவிலும், மற்ற பகுதிகளிலும், மருத்துவமனைகள், ஏழைகளுக்கு இல்லங்கள், முதியோர் இல்லங்கள், தொழுநோயாளர் பராமரிப்பு இல்லங்கள், தீராத நோயாளர் பராமரிப்பு இல்லங்கள் போன்றவற்றை அமைத்தார். இவரது திருப்பண்டங்கள், உலகின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவரின் தலை, கிரேக்க நாட்டின் Athos மலையிலுள்ள பெரிய Lavra துறவு ஆதீனத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நான்காம் நூற்றாண்டில், புனித பெரிய பசிலியார் ஆற்றிய இரக்கச் செயல்கள், இக்காலத் திருஅவைக்கு உந்துதலாக உள்ளன.    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.