2016-12-28 15:43:00

அமெரிக்கத் தலத்திருஅவையில், தேசிய குடியேற்ற வாரம்


டிச.28,2016. 2017ம் ஆண்டு சனவரி 8ம் தேதி முதல், 14ம் தேதி முடிய, அமெரிக்க ஐக்கிய நாட்டு தலத்திருஅவையில், தேசிய குடியேற்ற வாரம் கொண்டாடப்படும் என்று, அந்நாட்டு ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

அந்நியரை வரவேற்கும் பண்பை அடிக்கடி வலியுறுத்தும் விவிலிய பாரம்பரியத்தை பறைசாற்றும் ஒரு முயற்சியாக தேசிய குடியேற்ற வாரம் கொண்டாடப்படுகிறது என்று, குடியேற்ற பணிக்குழுவின் தலைவர், ஆயர் Joe Vásquez அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

"சந்திக்கும் கலாச்சாரத்தை உருவாக்க" என்ற மையக்கருத்துடன் கொண்டாடப்படும் இந்த குடியேற்ற வாரத்தில், குடியேற்றதாரர் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு ஆற்றியுள்ள தொண்டுகள் குறித்தும், உலகெங்கும் பரவியுள்ள மனித வர்த்தகம் என்ற பிரச்சனை குறித்தும் விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று, Zenit கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

25 ஆண்டுகளாக சிறப்பிக்கப்பட்டு வரும் தேசிய குடியேற்ற வாரம், அமெரிக்க குடிமக்களிடையே பரந்த மனப்பான்மையை உருவாக்குவதோடு, உலகெங்கும் அதிகமாகியுள்ள புலம்பெயர்ந்தோர் பிரச்சனைக்கென வேண்டுதல் எழுப்பும் ஒரு தருணமாகவும் அமையும் என்று அமெரிக்க ஆயர் பேரவை கருத்து வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.