2016-12-28 15:28:00

அன்னை தெரேசாவைப் புகழும் எலிசபெத் அரசியின் கிறிஸ்மஸ் செய்தி


டிச.28,2016. மிகச் சாதாரண மக்கள், மிக உன்னதமானவற்றை செய்யமுடியும் என்பதற்கு, கொல்கத்தாவின் அன்னை தெரேசா சிறந்ததோர் எடுத்துக்காட்டு என்று, பிரித்தானிய அரசி எலிசபெத் அவர்கள், தன் கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ளார்.

90 வயது நிறைந்த அரசி எலிசபெத் அவர்கள், இவ்வாண்டு வழங்கியுள்ள கிறிஸ்மஸ் செய்தியில், அன்னை தெரேசா அவர்களும், ரியோவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களும் நம் வாழ்வுக்கு உந்து சக்தியாக விளங்குகின்றனர் என்று கூறியுள்ளார்.

பல உன்னதப் பணிகளில் ஈடுபட்டுள்ள பலர், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் அளவு புகழ் பெறுவதில்லை என்றாலும், அவர்களது பணியை, அர்ப்பண உணர்வுடன் செய்து வருகின்றனர் என்று கூறிய அரசி எலிசபெத் அவர்கள், மறைந்து வாழும் இத்தகையோருக்கு, அன்னை தெரேசா ஒரு கலங்கரை விளக்காக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

"நாம் அனைவரும் பெரும் செயல்களை செய்ய முடியாமல் போகலாம், ஆனால், நாம் ஆற்றும் சிறு செயல்களையும் பெரும் அன்புடன் நம்மால் செய்யமுடியும்" என்று அன்னை தெரேசா அவர்கள் கூறிய சொற்களை, அரசி எலிசபெத் அவர்கள் தன் கிறிஸ்மஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.