2016-12-27 14:36:00

டேஜே இளையோருக்கு திருத்தந்தை செய்தி


டிச.27,2016. இளையோர் தங்கள் இதயங்களிலும், வாழ்விலும், ஆண்டவர் இயேசுவை அனுமதிப்பதன் வழியாக, நம்பிக்கையில் உறுதியாய் நிலைத்து நிற்குமாறு, கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

லாத்வியா நாட்டின் ரிகாவில், டிசம்பர் 28, இப்புதனன்று, டேஜே கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழு தொடங்கும், 39வது பன்னாட்டு கூட்டத்தில் கலந்துகொள்ளும் இளையோருக்கு, வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, இளையோர், தங்களின் வருங்காலத்தை, மற்றவர் தீர்மானிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

இக்காலத்தில் ஏராளமான மக்கள், வன்முறை, அநீதி, துன்பம், பிரிவினைகள் ஆகியவற்றால் சோர்வும், கலக்கமும் அடைந்துள்ளனர் என்றும், தீமையே எல்லாவற்றையும்விட வலிமைமிக்கதாய் உள்ளது என்ற எண்ணத்தையும் அவர்கள் கொண்டுள்ளனர் என்றும், கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் வரலாற்றில், தீமை வெற்றியடையாது என்பதை, இளையோர், தங்கள் வார்த்தையாலும், செயலாலும் வெளிப்படுத்துமாறு ஊக்குவித்துள்ள திருத்தந்தை, ரிகா நகரில் நடைபெறும் இந்தக் கூட்டம், இளையோர், இயேசுவில் நம்பிக்கை கொண்டு வளருவதற்கு உதவும் என்ற தனது ஆவலையும் வெளியிட்டுள்ளார்.

 “நம்பிக்கைக்குச் சான்று” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த ஐந்து நாள் கூட்டத்தில் ஆர்த்தடாக்ஸ், கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ சபைகளின் பல்லாயிரக்கணக்கான இளையோர் கலந்துகொள்கின்றனர். இக்கூட்டம், டிசம்பர் 28 முதல், சனவரி முதல் தேதி வரை நடைபெறுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.