2016-12-27 15:03:00

சுற்றுச்சூழலைப் பாதுகாக்குமாறு கத்தோலிக்கருக்கு வேண்டுகோள்


டிச.27,2016. கத்தோலிக்கரைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள பிலிப்பீன்ஸ் நாட்டில், நடைபெறும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுமாறு, கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளனர், அந்நாட்டுத் தலத்திருவை அதிகாரிகள்.

கிறிஸ்மஸ் கால நிகழ்வுகளில், கார்பனை அதிகமாக வெளியேற்றாமல் இருப்பதில், கவனம் செலுத்துமாறு, அந்நாட்டில் பணியாற்றும் அயர்லாந்து அருள்பணியாளர் ஜான் லெய்டன் அவர்கள் கூறியுள்ளார். இக்கிறிஸ்மஸ் காலத்தில், நுகர்வுப் பொருள்கள் பற்றி அதிகமாக அக்கறை எடுத்துக்கொள்வதில்லை எனவும், அன்னை பூமி மீது கிறிஸ்தவர்கள் கடுமையாய் நடந்துகொள்ளக் கூடாது எனவும், பரிந்துரைத்துள்ளார் அருள்பணி லெய்டன்.

மேலும், சுற்றுச்சூழலை எப்போதும் மதித்து நடக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள, மனிலா துணை ஆயர் புரோடெரிக் பபிலோ அவர்கள், கிறிஸ்மஸ் காலத்தில், மக்கள் அளிக்கும் பரிசுப்பொருள்கள் அனைத்தும் இயற்கை வழங்கியவையே என்பதை நினைவுபடுத்தியுள்ளார்.

புறக்கணிப்புக் கலாச்சாரத்தை உதறிவிடுவது, கிறிஸ்மஸின் உண்மையான பொருளை பிரதிபலிக்கின்றது என்றும், ஆயர் பபிலோ அவர்கள், கூறியுள்ளார்.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.