2016-12-26 13:10:00

வாரம் ஓர் அலசல் – குழந்தைகளின் ஒளிமயமான வாழ்வுக்கு..


டிச.26,2016.  குழந்தை. கழுத்திலும் உடலிலும் அழகூட்டும் நகையில்லை, விலையுயர்ந்த நாகரீக ஆடையில்லை, காலணிகள் எதுவுமில்லை, தலைவாரவில்லை, ஆயினும் குழந்தை கொள்ளை அழகு.. புன்முறுவல் அள்ளித்தெளிக்கும் குழந்தை முகம் காணுகையில், தெய்வமே நேரில் வந்து தரிசனம் தருவதாய், எல்லாருக்கும் மகிழ்ச்சி ஊற்றெடுக்கின்றது. கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பித்திருக்கும் இவ்வேளையில், இப்படித்தான் குழந்தைகள் நம் கண்முன் வருகிறார்கள். தாயின் உதரத்தில் கரு உண்டாகி நான்கே வாரங்களில், முதலாவது மூளை உயிரணுக்கள் நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் வேகத்தில் உருவாகின்றன. இவையெல்லாம் மிகக் கவனமாக ஏற்படுத்தப்பட்டவை. குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களின் மூளை ஏறத்தாழ "வெறுமையானது". அதாவது எதனையுமே கற்றுக் கொள்வதற்கு அது தயாராக இருக்கும். அவர்கள் வளர வளர கண்களால் காணும் எதுவும், காதுகளால் கேட்கின்ற எதுவும், தொடுகையினால் உணரும் எதுவும், நாவினாலே ருசிக்கின்ற எதுவும் அவர்களது 'புதிய' மூளையில் பதிகின்றன. நமக்கு சாதாரணமாகத் தோன்றும் நடப்புகள் எல்லாம் அவர்கள் புதியதாகக் கற்றுக் கொள்வதாக இருக்கும். இவை அவர்களது மூளையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. நியூரோன்களின் கோர்வைகளிலே தாங்கள் புரிந்து கொண்டவற்றைச் சேமிக்கிறார்கள். எனவே, குழந்தைகளின் மூளை உயிரணுக்களின் வளர்ச்சி, அவர்கள் வளரும் சூழலையும் அனுபவங்களையும் பொறுத்து இருக்கும். பெரியோர்களாகிய நாம் அவர்களுக்கு நல்ல அனுபவங்களை வழங்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் பரிந்துரைக்கின்றனர். இக்குழந்தைகளின் ஒளிமயமான வாழ்வுக்கு, பெரியவர்களாகிய நாம் எவ்வாறு உதவ வேண்டும் என, சேலம் மறைமாவட்டம், அருள்பணி லியோ வில்லியம் அவர்கள் சொல்கிறார்.

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று”

என்ற பாடல் வரிகளிலுள்ள குழந்தை குணம், நம் வாழ்வின் இலக்கணமாகட்டும்! வத்திக்கான் வானொலியின் தமிழ் நேயர்கள் அனைவருக்கும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின் நல் வாழ்த்துக்களையும, புலரவிருக்கின்ற புத்தாண்டின் வணக்கங்களையும் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

டிசம்பர் 28, இப்புதனன்று நம் தாய்த் திருச்சபை மாசற்ற குழந்தைகளின் விழாவைக் கொண்டாடுகிறது. கிறிஸ்துவின் முதல் வேதசாட்சிகளாக இறந்த குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள். இவர்கள், இயேசுவுக்காக இரத்தம் சிந்தி இறந்தவர்கள்.

இன்றைய நற்செய்தி வாசகம் - மத் 2: 13-18 வரை உள்ள வசனங்களில் இந்த நிகழ்வை வாசிக்கிறோம். ஞானிகள் திரும்பி வராததால், சீற்றம்கொண்ட ஏரோது, இரண்டு வயதும், அதற்கு உட்பட்டதுமான அனைத்துக் குழந்தைகளையும் கொன்று குவிக்கிறான். இதே போன்றதொரு நிகழ்வை பழைய ஏற்பாட்டில், விடுதலைப் பயண நூலில் 2:11-15 வரை உள்ள வசனங்களில் வாசிக்கிறோம். எகிப்து மன்னன் இஸ்ராயேல் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடாது என்பதற்காக பிறக்கின்ற அனைத்து ஆண் குழந்தைகளையும் கொல்கிறான்.

எகிப்து மன்னனால் மோசேயின் காலத்திலும், ஏரோது மன்னனால் இயேசுவின் காலத்திலும், ஏன் இந்த பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட வேண்டும்? இவர்களுக்கு ஏன் இந்த அவல நிலை? இதற்கு யார் காரணம்?

இயேசு மகாகாவியத்திலிருந்து இந்த கேள்விக்கு பதிலளிக்கலாம்:

நெஞ்சகமோ நிரந்தர வஞ்சகமாயிருந்தால்

அடுத்தவன் மீது அவதூறு நினைவும்

களவும் பொய்யும் காமமும்

கர்வமும் பொறாமையும்

கண்ணியம் இன்மையும்

கொலையும் ஏமாற்றமும்

பேராசையும் நிரம்பியிருக்கும்.

ஆம். எகிப்து மன்னன், ஏரோதின் நெஞ்சகத்தில் வஞ்சமிருந்ததால், கள்ளமற்ற, மாசற்ற இக்குழந்தைகள் நஞ்சகத்திற்கு ஆளாகிறார்கள். இயேசுவின் பிறப்பால் எங்கே தனது பதவியும், புகழும் பறிபோய்விடுமோ என்ற ஏரோது மன்னனின் கர்வமும், பொறாமையும், பேராசையும் கண்ணியமில்லாமல் மாசற்ற இக்குழந்தைகளை பலியாக்குகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்நிகழ்வு இன்று நமக்கு, நம் வாழ்வுக்கு என்ன செய்தியைத் தருகிறது? இயேசுவின் காலத்தில் இறந்த மாசற்ற குழந்தைகளைப் போல இன்றும், எத்தனை குழந்தைகள் அவலப்படுகிறார்கள்? பலியாக்கப்படுகிறார்கள்?

கருச்சிதைவு, சிசுக்கொலைகளால் இவ்வுலகைப் பார்க்கும் முன்பே மடியும் குழந்தைகள், உண்பதற்குப் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் பசிப்பிணியால் மடியும் குழந்தைகள், ஏழ்மை, வறுமையின் காரணமாக கல்வி கற்க வாய்ப்பின்றி கட்டாயமாக வேலைக்குச் செல்லும் குழந்தைத் தொழிலாளர்கள், சுயநல ஊடகங்களால் சிதைக்கபடும் குழந்தைகள், பாலியல் வன்முறைகளால் தங்கள் வாழ்க்கையை இழந்து நிற்கும் குழந்தைகள், போர், கலவரம், தீவிரவாதத்தால் அவலப்படும் குழந்தைகள், சமுதாயத்தில் வகுப்புவாதம் என்ற வேறுபாட்டினால் தங்களின் உரிமையை இழந்து நிற்கும் குழந்தைகள், கணவன், மனைவியின் இடையில் உருவாகும் மனத்தாங்கலினால், விவாகரத்தால் பெற்றோரைப் பிரிந்து வாழும் குழந்தைகள் என்று, மானுடத்தின் சுயநலத்தினால், அவலங்களால் பலியாக்கப்படும் மாசற்ற குழந்தைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்த அவலநிலைகள் மாற நாம் என்ன செய்யப் போகிறோம்?

செப்டம்பர் மாதம் 2009 ஆம் ஆண்டு, இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த யுகரத்னா என்ற சிறுமி, உலகிலுள்ள 300 கோடி குழந்தைகளின் குரலாக ஐ.நா. சபையில், “எப்படிப்பட்ட உலகை பெரியவர்களாகிய நீங்கள் எங்களுக்குத் தருகிறீர்கள்?” என்ற கேள்வியை எழுப்பினார். உலகையே உலுக்கிய ஒரு கேள்வி இது.

திருத்தந்தை பிரான்சிஸ், ‘உமக்கேப் புகழ்’என்ற தமது திருமடலில், எண் 60ல் “எப்படிப்பட்ட உலகை நாம் நமக்குப்பின் வருபவர்களுக்கு, வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு விட்டுச் செல்கிறோம்?” என்ற கேள்வியை ஆழமாகச் சிந்திக்க அழைக்கிறார்.

நல்லதொரு உலகையும், வாழ்வையும் குழந்தைகள் சுவைக்க வேண்டுமெனில், நாம் அனைவரும் குழந்தை குணமும்... குழந்தை மனமும் கொண்டு வாழ முயற்சித்தல் வேண்டும். “குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று” என்ற பாடல் வரிகளைப் புரிந்து குழந்தைகளை மதிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் வளர்ச்சியில், ஆன்மீக வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி போன்றவைகளில் தங்கள் கவனத்தை அதிகரித்தல், குழந்தைகளின் ஒளிமயமான வாழ்வுக்கு வழிவகுக்கிறது.

குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சி. மழலை மொழி கேட்டாலே பூரிப்பு. நம் நெஞ்சகத்தின் வஞ்சகத்தைத் தவிர்த்து, இப்பிஞ்சுகளின் தஞ்சகமாகிட இறைவன் துணை வேண்டுவோம். ஓன்றுபட்டு செயல்படுவோம். மீண்டும் ஒருமுறை வத்திக்கான் வானொலியின் தமிழ் நேயர்கள் அனைவருக்கும் கிறிஸ்து பிறப்புப் மற்றும் புத்தாண்டின் நல்வாழ்த்துக்கள்(அருட்பணி ம.லியோ வில்லியம்,சேலம் மறைமாவட்டம்)

அருட்பணி ம.லியோ வில்லியம் அவர்கள் அழைப்பு விடுத்தது போல், பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கிட  ஓன்றுபட்டு செயல்படுவோம். இக்காலத்தில், சர்வசாதாரணமாக நடக்கின்ற குழந்தைக் கடத்தல் நிகழ்வுகளைத் தடுப்பதற்கு, சமுதாயத்தில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னை கிண்டியில் உள்ள பிஸிக்ஸ் பிசினஸ் கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (fhyzics business consultants private limited) எனும் நிறுவனம், SOP (Standard Operating Procedure) என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி, சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது. www.fhyzics.com இணையதளத்திலும் அதைப் பதிவு செய்திருக்கிறது. அந்த நிறுவனத்தினர் சில பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளனர்.

தேவைக்கு அதிகமான பணத்தை பாக்கெட் மணியாக பள்ளிக்குக் கொடுத்தனுப்ப வேண்டாம்.

தங்கம், வெள்ளி, உள்ளிட்ட உயர்ந்த மதிப்புள்ள ஆபரணங்களைக் குழந்தைகளுக்கு அணிவித்து பள்ளிக்கு அனுப்புவது கூடவே கூடாது.

குழந்தைகளுக்கு வீட்டு முகவரி, குடும்பத்தில் உள்ளவர்களின் தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை எவ்வளவு சீக்கிரத்தில் சொல்லித்தர முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் சொல்லித் தர வேண்டும்.

 ரத்த வகை, ஒவ்வாமை மருந்துகள் உள்ளிட்ட குழந்தைகளின் மருத்துவத் தகவல்களை அறிந்து வைத்திருப்பது அவசர நேரத்தில் உதவும்.

பெற்றோர் அனுமதியில்லாமல், பெற்றோருக்குத் தெரியாமல் குழந்தைகள் எங்கும் செல்லாதவாறு கண்காணிப்பது முக்கியம்.

குழந்தைகளின் தினசரி செயல்பாடுகளிலும், பழக்கவழக்கங்களிலும் திடீர் மாற்றம் எதுவும் தென்படுகிறதா என்பதை பள்ளியும் பெற்றோரும் தொடர்ந்து கவனிக்க வேண்டும். அப்படி இருந்தால், இருதரப்பும் உடனடியாக அதுபற்றி தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டும்.

புதிய நபர்கள், மூன்றாம் நபர்களிடம் எந்த அளவுக்கு இடைவெளி இருக்க வேண்டும் என்பதை குழந்தைகளிடம் தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும்.

பழக்கமில்லாதவர்களின் வாகனத்தில் பயணம் செய்யக்கூடாது, அவர்கள் தரும் உணவுப் பொருட்களை வாங்கக் கூடாது என்று எச்சரிக்கை செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கு, இனிப்புத் துண்டுக்கும், நெருப்புத் துண்டுக்கும் பேதம் தெரியாது. விழத் தெரியும், யாரையும் விழ வைக்க தெரியாது. சிரிக்கத் தெரியும், சிரிக்க வைக்க தெரியும். எனவே, குழந்தைகளின் பாதுகாப்பில் அக்கறை காட்டி, அவர்களின் எதிர்காலத்தை சுடர்விடச் செய்வோம். பிறந்திருக்கும் இயேசு பாலனின் துணையுடன், இம்முயற்சியில், தொடர்ந்து பயணிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.