2016-12-26 13:32:00

சிறு தொழில் அமைக்க கிறிஸ்தவர்களுக்கு பாகிஸ்தானில் உதவி


டிச.26,2016. கிறிஸ்மஸ் பெருவிழாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில அரசு, அங்குள்ள கிறிஸ்தவ தொழில் முனைவர்களுக்கு வட்டியில்லா கடனை வழங்கியுள்ளது.

லாகூரிலுள்ள பிரிந்த சபை கிறிஸ்தவர்களின், ‘செபிக்கும் கரங்கள்’ என்ற பேராலயத்தில் நடந்த கிறிஸ்மஸ் விழாவில், 400 கிறிஸ்தவர்களின் சுய தொழில் திட்டத்திற்கு என அவர்களுக்கு வட்டியில்லா கடனை பஞ்சாப் முதல்வர் பெயரால் வழங்கிய அரசு அதிகாரிகள், பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் பொருளாதார நிலையில் பின்தங்கியிருப்பதால், இந்த ஊக்கத்தொகைகள் வழங்கப்படுவதாக அறிவித்தனர்.

பாகிஸ்தானில் தங்கள் உரிமைகள் மறுக்கப்படுவதாக எண்ணும் சிறுபான்மை சமூகத்தினரின் அச்சம் போக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அதிகாரிகள், தற்போது வழங்கப்படுவது பண உதவியாக அல்ல, மாறாக, நட்புடன் கூடிய உறவை கட்டியெழுப்பும் வழியாக நோக்கப்பட வேண்டும் என்றனர்.

தனியார்களின் கெடுபிடியான வட்டி விகிதங்களால் துன்பங்களை அனுபவிக்கும் சிறு தொழில் முனைவர்களுக்கு, அரசின் இந்த வட்டியில்லாக் கடன் பேருதவியாக உள்ளது என செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.