2016-12-26 13:22:00

இயேசுவைப் பின்பற்றுவது, கிறிஸ்மஸ் ஒளியைப் பின்பற்றுவதாகும்


டிச.26,2016. தன் வாழ்வையே வழங்கிய தியாகத்தின் வழியாக விட்டுச் சென்ற சாட்சியத்தை நாம் எடுத்துக்கொள்ள, புனித ஸ்தேவான் அழைப்பு விடுக்கும் இந்நாளில், கிறிஸ்மஸின் மகிழ்ச்சி நம் இதயங்களை மீண்டும் நிறைக்கிறது என இத்திங்களன்று வழங்கிய மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையின் முதல் மறைசாட்சியான புனித ஸ்தேவான் விழா, கிறிஸ்து பிறப்பு பெருவிழாவுக்கு அடுத்த நாளான இத்திங்களன்று இடம்பெற்றதை முன்னிட்டு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் பெயரால் கிறிஸ்தவர்கள் வெறுக்கப்படுவர், ஏனெனில், இருளில் தன் பாவங்களை மறைக்க முயலும் உலகம், இயேசு கொணர்ந்த ஒளியைக் கண்டு அஞ்சுவதே, இதற்கு காரணம் என்று கூறினார்.

இவ்வுலகின் இருளை விட்டு விட்டு, கிறிஸ்மஸ் இரவு கொணர்ந்த ஒளியைப் பின்பற்றுவது என்பது, இயேசுவைப் பின்பற்றுவதாகும் எனவும் தன் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை.

வாழ்வு மற்றும் ஒளியின் பாதையை தேர்ந்தெடுப்பதற்கு நமக்கு அழைப்பு விடுக்கும் இயேசுவின் மீது தன் விசுவாசத்தை அறிக்கையிட்டதால், புனித ஸ்தேவான், மறைசாட்சியாக கொல்லப்பட்டார் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையை தேர்ந்துகொண்டதால், உலகின் தீமைக்கு புனித ஸ்தேவான் பலியானாலும், இறுதியில் கிறிஸ்துவே வெற்றிவாகைச் சூடினார் என்றார்.

இன்றும் திருஅவை, ஒளிக்கும் வாழ்வுக்கும் சான்று பகரும் பணியில், பல்வேறு சித்ரவதைகளை, மறைசாட்சிய மரணம் வரையில் அனுபவித்து வருகின்றது  என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து சித்ரவதைகளையும் தாங்கி உறுதியுடன் சான்று பகர்ந்து வரும் கிறிஸ்தவர்கள், உண்மையில் பிறரன்பின் சான்றாகவும் வாழ்கிறார்கள் என்று கூறினார்.

இவ்வாறு, தன் மூவேளை செப உரையை வழங்கியத் திருத்தந்தை, இந்நாட்களில் தனக்கென வாழ்த்துக்களை அனுப்பிய அனைவருக்கும், குறிப்பாக செபம் எனும் பரிசை வழங்கிய அனைவருக்கும் தன் நன்றியையும் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.